| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2064 | திரு நெடும் தாண்டகம் || உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போது போக்குதல் இயல்பு. அப்படியே இப் பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்; அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள். இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன் சொல் மிழற்றும்; இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. தாயானவள் அக் கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும் படியான சில திரு நாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்; ஏவினவிடத்தும் அது பரகால நாயகியின் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு ஒன்றும் வாய் திறக்க மாட்டிற்றில்லை; அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும் அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து ‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல- அது சொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்– 13 | கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும், வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும், அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும், சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. - 13 | கல் மாரி,Kal Maari - (இப்பெண்பிள்ளை)(இந்திரன் பெய்வித்த) கல் மழையை கல் எடுத்து,Kal Eduthu - ஒருமலையை யெடுத்துப் பிடித்து காத்தாய் என்றும்,Kaaththaai Endrum - தடுத்தவனே! என்றும், நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்,Naamaru Pookkachi Ooragathaai Endrum - விரும்பத்தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும், அட்டாய் என்றும்,Attaai Endrum - ஒழித்தவனே! என்றும் மாகீண்ட,Maakinda - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த கைத்தலத்து,Kaiththalathu - திருக்கைகளையுடைய என் மைந்தா என்றும்,En Maindhaa Endrum - எனது மைந்தனே! என்றும் தன் கிளியை,Than Kiliyai - தன்னுடைய கிளியை நோக்கி வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்,Vil Iruthu Melliyal Thol Thoindhaai Endrum - வில்லைமுறித்துப் பிராட்டியைக் கைப்பிடித்தவனே! என்றும், வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்,Vekkavil Thuyil Amarntha Vaende Endrum - திருவெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும், அன்று,Andru - முன்பொருகாலத்தில் மல்லரை,Mallarai - மல்லர்களை மல் அடர்த்து,Mal Adarththu - வலிமையடக்கி சொல் எடுத்து,Sol Eduthu - திருநாமத்தின் முதற்சொல்லையெடுத்துக் கொடுத்து சொல் என்று,Sol Endru - (மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி, துணை முலை மேல்,Thunai Mulai Mael - (அது சொல்லத் தொடங்கினவாறே) உபயஸ்தரங்களிலும் துளி சோர,Thuli Soora - கண்ணீர் பெருகப் பெற்று சோர்நின்றாள்,Soornindraal - துவளாநின்றாள். |