Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2072 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2072திரு நெடும் தாண்டகம் || இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது. முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது. இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன. கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப் ‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்; ‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்; இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி, கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து ‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச் சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள். அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே, ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள். “இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது. ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு. 21
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.

- 21
மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ,Mai Vannam Naru Kunjchi Kuzhal Thaazha - தறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய் அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு,Iru Paadu - இருபுறத்திலும்
மகரம்சேர் குழை,Magaram Saer Kuzhai - மகரகுண்டலங்கள்
இலங்கி ஆட,Ilanki Aada - அசைந்துவிளங்கவும்
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ,Ey Vannam Vem Silaiae Thunai Aa - ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு
இங்கே,Ingae - இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்,Iruvar Aay Vandhaar - (தாமும் இளையபெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
கை,Kai - (அவருடைய) திருக்கைகள்
தாமரைவண்ணம்,Thamaraivannam - செந்தாமரைப்பூப்போலு மழகுடையன;
வாய்,Vaai - திருப்பவளமும்
கமலம் போலும்,Kamalam Polum - தாமரையொக்கும்;
கண் இணையும்,Kan Inaiyum - திருக்கண்களும்
அரவிந்தம்,Aravindham - அத்தாமரையே
அடியும்,Adiyum - திருவடிகளும்
அஃதே,Aghdhe - அந்நத் தாமரையே;
அவ்வண்ணத்தவர்,Avvannaththavar - அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை,Nilaimai - நிலைமையை
கண்டும்,Kandum - கண்டுவைத்தும்
தோழீ,Thozhee - தோழியே!
அவரை,Avarai - அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்,Thaevan Endru Anjinom - பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!