| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 467 | பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருத த்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ண த்ருஷ்டாந்தங் கூறுகின்றனர். உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரை கல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன் போன்ற உன்னை, அற்ப சாரங்களில் மண்டின என் நாக்காகிற உரை கல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவது போல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப் பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து. உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்; நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று; பொல்லாப் பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே; உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரை கல்லில் நிறம் பார்க்கவிறே உரைப்பது. ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள் கொள்க. ‘உன்னைக் கொண்டு’ இத்யாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம். ஒருவராலும் துதிக்க வொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பது போலாகுமே யன்றி, பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார். இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ள வேணும். “மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக் கொண்டு நின்றேன். நல்ல பொன்னை நல்ல கல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப் போலே, உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்; பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது. இப்படி அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்து வந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை; ‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந் நன்றிகளை நீர் தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்; இப்படி நான் உம்மைப் பரம பாவநராக்கி யிருக்கச் செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து, என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை! உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன; அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ் வெம்பெருமான் திருவடிகளில் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்; “நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற் போல நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும். 5 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5 | என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே! என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் உயிர், En uyir - என் ஆத்மாவை காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே! பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன் உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை என்னுள் , Ennul - என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன் என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும் உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன் |