திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 10-2 இரக்கமின்றி (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1858பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் – தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் – பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது) 1
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர் பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம் குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1
பதவுரை Show / Hide
எம் கோன், Em Kon - எங்களுக்குத் தலைவனான இராவணன்
இரக்கம் இன்றி, Irakkam Inri - ஈரநெஞ்சு இல்லாமல்
செய்த, Seitha - பண்ணின
தீமை, Theemai - அபசாரமானது
இம்மையே, Immaiye - இப்பிறப்பிலேயே
எமக்கு, Emakku - எங்களுக்கு
எய்திற்று காணீர், Eydhithru Kanneer - பலித்துவிட்டது பாருங்கோள்
இன்று, Indru - இப்போது
யாம், Yaam - நாங்கள்
பார்க்க, Paarka - விரிவாக
உரைத்து என், Uraiththu En - சொல்லுவதனால் என்ன பயன்?
இராவணன் பட்டனன், Iravanan Pattanan - ராவண்ன் மாண்டு போனான்,
இனி, Ini - இனிமேல்
யாவர்க்கு உரைக்கோம், Yaavarkku Uraikkom - யாருக்குச் சொல்லுவோம்
குரங்கு நாயகர்காள், Kurangu Naayakar Kaal - வாநரஸேநாபதிகளே!
இளங்கோவே, Ilankove - இளைய பெருமாளே!
கோல் வல்வில் இராமபிரானே, Kol Valvil Ramapiraney - அழகிய திண்ணிதான சார்ங்கவில்லைக்கொண்ட ஸ்ரீராமபிரானே!
அரக்கர், Arakkar - ராக்ஷஸஜாதியில்
ஆடு அழைப்பார் இல்லை, Aadu Azaippaar Illai - வெற்றியைச் சொல்லிக் கூவுவாரில்லை
நாங்கள், Naangal - (தோற்றொழிந்த) நாங்கள்
அஞ்சினோம், Anjinom - பயப்படுகின்றோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - தோற்ற தோல்விக்கு நாங்கள் ஆடுகிற ஆட்டங்காண்மின் என்றவாறு.
1859பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம் எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ) 2
பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2
பதவுரை Show / Hide
அந்த எம்பெருமான், Andha Emperumaan - ஸ்வாமிந் ஸ்ரீராமபிரானே! (- (அஞ்சினோம், தடம்பொங்கத்தம் பொங்கோ))
நீள், Neel - நீண்ட
பத்து முடியும், Paththu Mudiyum - பத்துதலைகளையும்
அவை இரட்டி, Avai Iratti - அந்தத் தலைகளின் கணக்கில் இரட்டிப்பான கணக்கை யுடையவையாய்
பாழி, Paazhi - வலிமைமிக்கவையான
தோளும், Tholum - (இருபது) தோள்களையும்
படைத்தவன், Padaiththavan - உடையவனான இராவணன்
மங்கையர் பால் சித்தம் வைத்து, Mangaiyar Paal Sittam Vaiththu - ஸ்த்ரீ விஷயத்தில் மனம் செலுத்தி
செல்வம் கெட்டான், Selvam Kettaan - (தனது) செல்வம் அழியப் பெற்றான்
செய்வது ஒன்று அறியா அடியோங்கள், Seivathu Ondru Ariyaa Adiyongal - இனிச் செய்யத் தக்க தொன்று மறிய கில்லாத நாங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும், Oththa Thol Irandum Oru Mudiyum - ஒன்றோடொன்று ஒப்பான இரண்டு திருத்தோள்களையும் ஒரு திருமுடியையுமுடையாய்
ஒருவர் தம் திறத்தோம் அன்றி, Oruvar Tham Thiraththom Andri - அத்விதீயரான தேவரீர் பக்கல் இதற்குமுன்பு ஈடு பட்டவர்களல்லாமையாலே
வாழ்ந்தோம், Vaazhnthom - கெட்டுப்போனோம்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழிய வேணும்,
1860பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 3
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-3
பதவுரை Show / Hide
குலம் வேந்தே, Kulam Vendee - (குற்றமற்றவர்களைத் தண்டியாத இக்ஷ்வாகுவின்) வம்சத்துக்குத் தலைவரே! (- (அக்குற்றங்காரணமாக) (ஆகையாலே) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
தாசரதீ, Thaasarathii - ஸ்ரீராமபிரானே!
தகவு இலி எம்கோமான், Thagavu Ili Emkoman - ஈர்நெஞ்சு இல்லாதவனாய் எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணன்
அன்று, Anru - (நீங்கள் வனத்திலே தாபஸராயிருந்த) அக்காலத்திலே
தண்டகாரணியம் புகுந்து, Thandakaraniyam Pugunthu - தண்டகாரணியத்தில் பிரவேசித்து
தையலை, Thailai - அழகிற்சிறந்த பிராட்டியை
கொண்டு போந்து, Kondhu Ponthu - அபஹரித்து வந்து
எமக்கு, Emakku - எங்களுக்கு
ஓர் குற்றம் இல்லை, Or Kuttram Illai - ஒரு குற்றமும் கிடையாது
கொல்லேல், Kollel - (எங்களைக்) கொல்லா தொழியவேணும்
பெண்டிரால் கெடும், Pendiraal Kedum - ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற
இக் குடி தன்னை, Ik Kudi Thannai - இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி
பேசுகின்றது என், Pesugindrathu En - பேசலாவது என்ன இருக்கிறது?
உன் அண்ட வாணர், Un Anda Vaanar - தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள்
உகப்பதே, Ugappadhe - ஸந்தோஷிக்கக்கூடிய காரியத்தையே
செய்தாய், Seithai - செய்தருளினீர்,
1861பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்) 4
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4
பதவுரை Show / Hide
ஏஞ்சல் இல், Aenjal Il - ஒரு குறைவுமில்லாதவனாய் (- (அப்படி சொல்லியும் அப்பாவி பணிந்து வாழ மாட்டாமையாலே) (அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.))
இலங்கைக்கு இறை, Ilankaiyil Irai - (இந்த) லங்காபுரிக்கு அரசனாய்
எம் கோன் தன்னை, Em Kon Thannai - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனை நோக்கி
முன், Mun - முன்பு
எங்கள் கண் முகப்பே, Engal Kan Mugappe - எங்கள் கண்ணெதிரில்
அவன் தம்பியே, Avan Thambiye - அவனுக்குத் தம்பியான விபீஷ்ணாழ்வான்
பணிந்து, Panindhu - விநயமுடன்கைகூப்பிநின்று
நங்கையை அரக்கர் குடிக்கு நஞ்சுதான் என்று சொன்னான், Nangaiyai Arakkar Kudikku Nanjudhaan Endru Sonnaan - ‘இப்பிராட்டி ராக்ஷஸ குலத்துக்கு விஷமாகத் தோன்றியவன் கிடாய்’ என்று சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றேபட்டோம், Vinchai Vaanavar Vendirthepattoam - தேவஜாதிகள் ஆசைப்பட்டிருந்தபடியே (நாங்கள்) அனர்த்தப்பட்டோம்
வேரி வார் பொழில் மா மயில் அன்ன, Vaeri Vaar Pozhil Maa Mayil Anna - பரிமளத்தையுடைத்தாய் விசாலமான சோலையில் வளர்ந்த சிறந்தமயில் போன்றவளும்
அஞ்சு அல் ஓதியை, Anju Al Othiyai - (சுருட்சி நீட்சி குளிர்ச்சி அழகு பரிமளம் என்று) ஐந்துவகைப்பட்ட குணங்களையுடையதாய் ராத்ரிபோற் கறுத்திருக்கின்ற கூந்தலையுடையளுமான பிராட்டியை
கொண்டு நடமின், Kondhu Nadamin - கொண்டு போங்கள்
1862பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி – அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 5
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர் கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-5
பதவுரை Show / Hide
செம் பொன் நீள் முடி, Sem Pon Neel Mudi - செம்பொன்னாற் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை யுடையனாய் (- (அதுவே நிமித்தமாக) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
எங்கள், Engal - எங்களுக்குத் தலைவனான
இராவணன், Iravanan - ராவணனானவன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து, Seethai Enbathu Oru Deivam Konarnthu - ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து
வம்பு உலாம் கடி காவில், Vambu Ulam Kadi Kaavil - புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே
சிறை ஆ வைத்ததே, Sirai Aa Vaiththadhe - சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே
குற்றம் ஆயிற்று, Kutram Aayitru - அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான், Kumbanodu Nikumbanum Pattaan - கும்பனும் நிகும்பனும் மாண்டொழிந்தனர்
கூற்றம், Kootram - (இராவணன்கையில் முன்பு தோற்றிருந்த) யமனானவன்
மானிடம் ஆய் வந்து தோன்றி, Maanidam Aay Vandhu Thonri - மநுஷ்ய வேஷத்தைப் பூண்டு கொண்டு இங்ஙனே வந்துதோன்றி
எம்மை, Emmai - எங்களை
அம்பினால், Ambinaal - பாணத்தினால்
கொன்றிடு கின்றது, Kondridhu Kindrathu - கொல்லுகின்றான்.
1863பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ) 6
ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-6
பதவுரை Show / Hide
ஓதம், Otham - அலைகலையுடைய (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
கடந்து ஏறி, Kadandhu Eri - தாண்டி
உயிர்கொள் மா கடி காவை இறுத்து, Uyirkol Maa Kadi Kaavai Irudhu - உயர்த்தியையுடைத்தாய்ப் பெரிதாய் மணம்மிக்கதான அசோகவனத்தை முறித்து
காதல், Kaadhal - (இராவணனுடைய) அன்புக்கு இலக்கான
மக்களும், Makkalum - அக்ஷகுமாரன் முதலிய புத்திரர்களையும்
சுற்றமும், Sutramum - அந்தரங்க சேவகர்களையும்
கொன்று, Konru - கொலை செய்து
கடி இலங்கை மலங்க எரித்து, Kadi Ilangai Malanga Erithu - காவலையுடைத்தான லங்கையானது கலங்கும்படியாகத் தீக்கொளுவி
தூது வந்த, Thoodhu Vanda - (பிராட்டிபக்கல்) தூத சொல்லவந்த
குரங்குக்கே, Kurangukke - அனுமான் கையிலேயே
உங்கள் தோன்றல் தேவியை, Ungal Thondral Deiviyai - உங்கள் ஸ்வாமியான பெருமாளுடைய தேவியான ஸீதையை
விட்டுக் கொடாதே, Vittuk Kodaadhe - ஸமர்ப்பியாமல்
ஆதர், Aadhar - அவிவேகிகளான நாங்கள்
நின்று படுகின்றது அந்தோ, Ninru Padikindrathu Andho - இப்படி துவண்டு நின்று அநர்த்தப்பட வேண்டிற்றாயிற்று ஐயோ!
1864பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை – நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் – குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் – நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 7
தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச் சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-7
பதவுரை Show / Hide
மா மணி வண்ணா, Maa Mani Vanna - நீலமணிநிறத்தனாவ பெருமானே! (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
தாழம் இன்றி, Thaalam Inri - காலதாமதமில்லாமல்
முந்நீரை, Munnirai - கடலை
அஞ்ஞான்று, Anjjaantru - அன்றைக்கு
தகைந்ததே கண்டு, Thakainthadhe Kandu - அணைசெய்த்தொன்றையே கண்டு,
வஞ்சி நுண் மருங்குல், Vanchi Nun Marungul - வஞ்சிக்கொடி போன்று நுட்பமான இடையை யுடையளாய்
மாழை மான் மட நோக்கியை, Maazhai Maan Mada Nokkikie - பேதைமைக்குணமுள்ள மானின்பார்வை போன்ற கபட மற்ற கண் பார்வையை யுடையளான ஸீதையை
விட்டு, Vittu - (தேவரீர் ஸந்நிதியிலே) ஸமர்ப்பித்துவிட்டு
இலங்கைக்கு இறை தன்னை அவனை, Ilangaikku Irai Thannai Avanai - அந்த இராவணனை
எங்களை ஒழிய கொலை, Engalai Ozhiy Kolai - எங்களைத் தவிர்த்துக் கொல்லவேணும்
சூழும் ஆ நினை, Soolum Aa Ninai - அடியோங்கள் தேவரிரைச் சூழ்ந்துக்கொண்டு பிரார்த்திக்கிறவிதனைத் திருவுள்ளம் பற்றவேணும்
சொல்லினோம், Sollinom - எங்கள் கோரிக்கையை விண்ணப்பஞ்செய்து கொண்டோம்
1865பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய் அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம்) 8
மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத் தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-8
பதவுரை Show / Hide
மனம் கொண்டு ஏறும், Manam Kondu Aerum - நெஞ்சைக் கவரும்படியான அழகுடையவர்களான (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
மண்டோதரி முதலா, Mandothari Muthala - மந்தோதரி முதலான
அம் கயல் கண்ணினார்கள், Am Kayal Kanninargal - அழகிய மீன்போன்ற கண்களையுடையரான மனைவியர் பலர்
இருப்பு, Iruppu - குறையற்றிருக்கச் செய்தேயும்,
தனம் கொள், Thanam Kol - தனக்குச் செல்வமாயிருக்கின்ற
மெல் முலை, Mel Mulai - அவர்களுடைய அழகிய முலைகளிலே
நோக்கம் ஒழிந்து, Nokkam Ozhinthu - கண் செலுத்தாமல்
சில தாபதர் தஞ்சமே என்று, Sila Thapathar Thanjame Endru - (இப்பிராட்டிக்காகப் பரிந்து வரக்கூடியவர்கள்) சில காட்டாள்கள்தானே அவர்கள்சரக்கோ, என்று அவலீலையாக நினைத்துக் கொண்டு
புனம் கொள் மென் மயிலை சிறை வைத்த, Punam Kol Men Mayilai Sirai Vaiththa - காட்டில் தன்னிஷ்டப்படி திரிகின்ற அழகிய மயில் போன்றவளான பிராட்டியைச் சிறையிலே வைத்தவனாய்
புன்மை யாளன், Punmai Yalan - நீசனான இராவணனுடைய
நெஞ்சில், Nenjil - மருமத்திலே
புக, Puga - உறைக்க
எய்த, Eitha - அம்பு செலுத்தியவரும்
அனங்கள் அன்ன, Anangal Anna - மன்மதனைப் போன்ற அழகுடையவரும்
திண் தோள், Thin Thol - வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான
எம் இராமற்கு, Em Iramarukku - எங்களிராமவிரானுக்கு
1866பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் – எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ – நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 9
புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில் சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9
பதவுரை Show / Hide
ஓர் மாத்திரை போதில், Or Maathirai Podhil - ஒரு கண்ணிமைப்பொழுதில் (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
புரங்கள் மூன்றும், Purangal Moondrum - முப்புரங்களையும்
பொங்கு எரிக்கு, Pongu Erikku - அக்நிஜ்வாலைக்கு
இரை கண்டவன், Irai Kandanavan - இரையாக்கின ருத்ரனுடைய
அம்பில், Ambil - அம்புகளிற்காட்டிலும்
சரங்கன், Sarangkan - இந்த ராமபரணங்கள்
கொடிது ஆய், Kodithu Aay - கொடியவைகளாய்
அடுகின்ற, Adhigindra - பொசிக்கின்றன
சாம்பவான், Sambavaan - ஸ்ரீஜாம்பவான்
உடன் நிற்க, Udan Nirka - புருஷகாரமாகக் கூடநிற்க
தொழுதோம், Thozhudhom - வணங்குகின்றோம்
எந்தை பிரானே, Endhai Pirane - எங்கள் நாயகனே!
இலங்கு வெம் கதிரோன்தான் சிறுவர், Ilangu Vem Kathironthan Siruvar - விளங்குகின்ற ஸூர்யனுக்குப் புதல்வனாய்
குரங்குகட்கு அரசே, Kurangukadku Arase - வாநரங்கட்குப் பிரபுவான ஸுக்ரீவனே!
எமக்கு நீ இரங்கு, Emakku Nee Irangu - எங்கள் விஷயத்திலே நீ இரங்கியருளவேணும்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழியவேணும்
கூறினோம், Koornom - இந்தப் பிரார்த்தனையே அடுத்தடுத்துச் சொல்லுகின்றோம்,
1867பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே- இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம்) 10
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பகவத் பக்தர்களே!, (- (இது செய்தால்))
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர, Angu Vaanavarkku Aakulam Theera - தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி
அணி இலங்கை அழித்தவன் தன்னை, Ani Ilangai Azhithavan Thannai - அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக,
பொங்குமா வலவன் கலிகன்றி, Pongumaa Valavan Kalikanri - கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார்
புகன்ற, Pugandra - அருளிச்செய்த
பொங்கத்தம் கொண்டு, Pongattham Kondo - ‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு
இ உலகினில், I Ulaginil - இவ்விபூதியிலே
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
பாடி நின்று ஆடுமின், Paadi Nindru Aadumin - பாடிக்கொண்டு கூத்தாடுங்கள்,
இம்மையே இடல் இல்லை, Immaye Idal Illai - (உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது,
இறந்தால், Irandhaal - மரணமானபின்பு
தங்கும் ஊர், Thangum Oor - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம்
அண்டமே, Andame - பரமபதமேயாம்,
கண்டு கொண்மின், Kandu Konmin - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள்
சாற்றினோம், Saatrinom - இஃது எல்லாருமறியச்சொன்னோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - வெற்றியோ வெற்றி