திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-8 செங்கமலம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1618பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனித் தனியே பிரஹ்மாவைப் போலே சிருஷ்டிக்க ஷமராய் இருக்கிற பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகையாலே வந்த நிரவதிக சம்பத்தை உடைய ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நின்று அருளின இது தான் அலாப்யலாபமாகக் கொண்டு நிற்கிறவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடி கோள்-அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் போகப் பாருங்கோள்) 1
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1
பதவுரை Show / Hide
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம், Engum Mali Nirai Pugazh Naal Vedham - எவ்விடத்திலும் நிறைந்து பரவிய கீர்த்தியையுடைய நான்கு வேதங்களும் (- (உலகத்தவர்களே!))
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹாயஜ்ஞங்களும்
கேள்விகளும், Kelvigalum - (மற்றும் இன்றியமையாத)நூற்கேள்விகளும் (ஆகிய இவற்றை)
இயன்ற, Iyanra - இயற்கையாகவே அறிந்துள்ள
தன்மை, Thanmai - குணத்தையுடையராய்
அம் கமலத்து அயன் அனையார், Am Kamalathu Ayan Anaiyar - (எம்பெருமானுடைய) அழகிய நாபீ கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனையொத்தவரான அந்தணர்கள்
பயிலும், Payilum - நித்யவாஸஞ்செய்கிற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
அணி, Ani - அழகிய
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரில்
நின்று, Ninru - வந்துநின்று
உகந்த, Ugantha - (அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற
அமரர் கோ, Amarar Ko - நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமான் (யாவனென்னில்,)
செம் கமலம் திரு மகளும், Sem Kamalam Thiru Magalum - செந்தாமரை மலரில் வாழ்கின்ற ஸ்ரீதேவியும் புவியும் – பூமிதேவியும்
செம் பொன் தனது திரு அடியின் இணை வருட, Sem Pon Thanathu Thiru Adiyin Inai Varud - (தனது) சிவந்த பொன்மயமான இரண்டு திருவடிகளையும் தடவவும்
முனிவர் ஏத்த, Munivar Aettha - மஹர்ஷிகள் புகழ்ந்து துதிக்கவும்
வங்கம் மலி தட கடலுள் –, Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலில்
அனந்தன் என்னும் வரி அரவின், Ananthan Ennum Vari Aravin - திருவனந்தாழ்வானென்கிற புள்ளிகளை யுடைய ஸர்ப்பசயனத்தில்
துயின்ற, Thuyindra - (பள்ளி கொண்டு) யோக நித்திரை செய்கின்ற
மாயோன், Mayon - ஆச்சரியமான குணமுடையவன்;;;
காண்மின், Kaanmin - காணுங்கள்
1619பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்னமானது அப்பூம் படுக்கையிலே போக ஸ்ரோதஸ்ஸில் தன்னை விஞ்சின பெடையோடு ஒக்க சாய்கிற நிரவதிக சம்பத்தை உடைய –அங்குத்தை திர்யக்குகளும் அகப்பட போக பிரதாநமாய்த்து இருப்பது) 2
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முநிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2
பதவுரை Show / Hide
செந்நெல் மலி கதிர், Sennel Mali Kathir - செந்நெற் பயிரினது (நெல்) நிரம்பிய கதிர்கள் (- (அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ -;) (யாவனென்னில்;))
கவரி வீச, Kavari Veesa - சாமரங்கள் போல் அசைந்தாடா நிற்கவும்
சங்கம் அவை முரல், Sangam Avai Murali - அசைந்தாடா நிற்கவும் சங்கங்கள் ஒலியா நிற்கவும்
அன்னம், Annam - ஆண் அன்னங்கள்
மலி பெடை யோடும், Mali Pedai Yodum - (தம்மிடத்தில் அன்பு) மிக்குள்ள பெண்ணன்னங்களுடனே
செம் கமலம் மலரை ஏறி அமரும், Sem Kamalam Malaiyai Eri Amarum - செந்தாமரை மலர்களின் மிது ஏறி வீற்றிருக்கப் பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
முன், Mun - முற்காலத்தில்
இ ஏழ் உலகும், I Ezh Ulakum - இந்த ஏழுலகங்களையும்
இருள் –, Irul - (அஜ்ஞாநமாகிற) அந்தகாரமானது
மண்டி உண்ண, Mandi Unna - மிகுந்து தன்வசமாக்கிக் கொள்ள  (அதனால்)
முனிவரொடு தானவர்கள் திசைப்ப, Munivarotu Thanavarkal Thisaippa - முனிவர்களும் அசுரர்களும் அறிவு கெட்டுக் கலங்க,  (அப்பொழுது)
வந்து, Vandu - திருப்பாற்கடலினின்று திருவவதரித்து
பன்னு, Pannu - பரவிய
கலை, Kalai - (அங்கங்களாகிய) சாஸ்திரங்களை யுடைய
நால்வேதம், Naalvedham - நான்கு வேதங்களினது
பொருளை எல்லாம், Porulai Ellam - அர்த்தங்களையெல்லாம்
பரி முகம் ஆய், Pari Mukam Aayi - ஹயக்ரீவமூர்த்தியாய்
அருளிய, Aruliyam - மீட்டுக்கொணர்ந்தருளிய
எம் பரமன், Em Paraman - நமது சிறந்த கடவுளாவன்.
1620பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர் உடைய விரோதியைப் போக்கி –அவர்கள் உடைய அபேஷிதம் சம்விதானம் பண்ணும் ஸ்வபாவன் என்கிற சுத்தியை எனக்கு பிரகாசிப்பித்தவன் கிடீர்) 3
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின் மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3
பதவுரை Show / Hide
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும், Malai Thigazh Sandhu Akil Kanagam Maniyum - ஸஹ்யமலையினிடத்துப் பொருந்தி விளங்குகின்ற சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-;  (யாவனென்னில்))
கொண்டு வந்து, Kondhu Vandu - திருட்டிக்கொணர்ந்து
உந்தி, Undhi - தள்ளி
வயல்கள் தோறும் மடைகள் பாய, Vayalgal Thorum Madaigal Paaya - கழினிகளிலெல்லாம் நீர்பாயும்
அலைத்து வரும், Alaitthu Varum - அலையெறிந்து கொண்டு வாரா நின்றுள்ள
பொன்னி, Ponni - காவேரியினால்
வளம் பெருகும், Valam Perugum - செழிப்பு மிகப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
குலம் தலைய மதம் வேழம், Kulam Thalaiya Madham Vezham - நல்ல சாதியிற் பிறந்த யானைகட்குள்ளே தலைமையையுடைய மதங்கொண்ட கஜேந்திராழ்வான்
பொய்கைபுக்கு, Poykaipukku - தடாகத்திலிறங்கின போது
கோள் முதலை பிடிக்க, Kol Muthalai Pidikka - வலிமையையுடைய  முதலையானது  (தன்னைப்) பிடித்திழுத்ததனால்
அதற்கு அணுங்கி நின்று, Adharku Anungi Nindru - அம்முதலைக்கு அஞ்சி நின்று
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ, Nila Thigazhum Malar Sudar Aye Sothi - நிலாவிளங்குகின்ற பரவுதலையுடைய சந்திரனை ஒத்த குளிர்ந்த ஒளியை (தண்ணளியை) யுடையவனே!
என்ன, Enna - என்று ஓலமிட்டுத்துதிக்க
நெஞ்சு இடர் தீர்த்து அருளிய, Nenju Idar Theerthu Aruliya - (அந்த கஜேந்திரனது) மனத்துன்பத்தை நீக்கியருளிய
எம் நிமலன், Em Nimalan - எமது குற்றமற்ற கடவுளாவன.
1621பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் – நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே) 4
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4
பதவுரை Show / Hide
பூகம் தொக்க, Pookam Thokka - பாக்கு மரங்கள் நிறைந்துள்ள (- அணி அழுந்தூர் நின்ற உதந்த அமரர் கோ-;  (யாவனென்னில்))
பொழில்கள் தோறும், Pozhilgal Thorum - சோலைகளிலெங்கும்
சிறை புலம்பு வண்டு ஒலிப்ப, Sirai Pulambu Vandu Olippa - சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும்
குயில் கூவ, Kuyil Koova - குயில்கள் கூவவும்
மயில்கள் ஆல, Mayilgal Aala - மயில்கள் கூத்தாடவும்
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து, Alambu Thirai Punal Pudai Soozhndhu - அலைகின்ற அலைகளை யுடைய காவிரியின் நீரானத பக்கங்களிலே சுற்றிப் பாய்தலினால்
அழகு ஆர், Azhagu Aar - அழகு மிக்கிருக்கின்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
செம் கண் ஓர் குன்றம், Sem Kan Or Kuntram - சிவந்த கண்களை யுடையதொரு மலை
சிலம்பு முதல் கலன் அணிந்து, Silambu Mudhal Kalan Anindhu - தண்டை முதலிய ஆபரணங்களைப் பூண்டு
திகழ்ந்தது என, Thigazhnthathu Ena - விளங்குவது போல
திரு உருவம் பன்றி ஆகி, Thiru Uruvam Pandri Aagi - மஹாவராஹரூபியாய்,
இலங்கு புவி மடந்தை தனை, Ilangu Puvi Madanthai Thanai - விளங்குகின்ற பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - (அண்டபித்தியினின்றுங் கோட்டாற்) குத்தியெடுத்து
புல்கி, Pulki - அணைந்து
எயிற்றிடை, Eyirtridai - (தனது) கோரதந்தத்தினிடத்தில்
வைத்து அருளிய, Vaiththu Aruliyah - வைத்தருளினவனான
எம் ஈசன், Em Eesan - எமது தலைவனாவன்.
1622பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹத்துக்கும் பிற்காலியாத மிடுக்கை உடைய ஹிரண்யன் உடைய உடலைக் கீண்டு – அவள் உடைய முலை வழியே அவளுடைய பிராணங்களும் வற்றி வரும்படி முலையை அமுது செய்த ஆச்சர்ய பூதன் கிடி கோள் இங்கு வந்து நிற்கிறவன்) 5
சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின் இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல் அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-5
பதவுரை Show / Hide
இனம் மேவு வரி வளை கை ஏந்தும், Inam Mevu Vari Valaik Aenthum - கூட்டமாக அணியப்பெற்ற கோடுகளையுடைய வளையல்களை யணிந்த (தமது) கைகளிலே ஏந்தப் பெற்றதும் (- அணி அழுந்தூர் நன்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்) (எம் மாயோன் காண்மின்))
கோவை ஏய் வாய, Kovai Aey Vaai - கொவ்வைக்கனியை யொத்த வாயையுடையதும்
மரகதம் போல், Maragatham Pol - மரகதரத்னம் போலப் பச்சை நிறமுடையதுமான
கிளியின், Kiliyin - கிளியைப் போன்ற
இன் சொல், In Sol - மதுரமான சொற்களையும்
அனம் மேவும் நடை, Anam Mevum Nadai - அன்னப்பேடை போன்ற நடையழகையுமுடைய
மடவார், Madavaar - இளமகளிர்
பயிலும், Payilum - மிகுதியாகப் பொருந்தப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி, Sinam Mevum Adal Ariyin Uruvam Aagi - மிக்க சீற்றங்கொண்டுள்ள வலிய நரசிங்க மூர்த்தியாய்
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு, Thiral Mevum Iraniyanathu Aagam Keendu - மிக்க பராக்ரமமமைந்த ஹிரண்யாஸுரனது மார்பைப் பிளந்து
மனம் மேவு வஞ்சனையால் வந்த, Manam Mevu Vanjanaiyahl Vantha - மனத்திற் கொண்டுள்ள வஞ்சக குணத்தோடு (தன்னைக்கொல்ல) வந்த
பேய்ச்சி, Peychchi - பூதனையென்னும் பேய்மகள்
மாள, Maal - இறக்கும்படி
உயிர வௌவிய, Uyira Vauviyah - (அவளது) உயிரைக் கவர்ந்த
1623பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும் அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –அத்விதீயமாய் ஆயதங்களுக்கு எல்லாம் பிரதாநமாய் இருக்கிற திரு ஆழியைப் பரிகரமாக உடையவனான என் ஸ்வாமி கிடி கோள்) 6
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும் ஆனதொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-6
பதவுரை Show / Hide
தேன் அமரும், Then Amarum - தேன் எப்போதும் பொருந்தியுள்ள (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;) (அவனாற் கொடுக்கப்பட்டவுடனே))
பொழில் தழுவும், Pozhil Thazhuvum - சோலைகளாற் சூழப்பட்ட
எழில் கொள், Ezil Kol - அழகைக் கொண்ட
வீதி, Veethi - தெருக்களிலேயுள்ள
செழு மாடம் மாளிகைகள், Sezhu Maadam Maaligaihal - செழித்த உபரிகை வீடுகளிலும் சிறந்த வீடுகளிலும்
கூடம் தோறும், Koodam Thoram - மற்றுமுள்ள இடங்களிலும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும், Aan Thol Seer Maraiyalar Payilum - கல்வி யொழுக்கங்களாற் சிறப்புப் பொருந்திப் பழமையான கீர்த்தியை யுடைய வேதம்வல்ல அந்தணர்கள் நெருங்கி வஸிக்கப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
துயர் தீர, Thuyar Theera - வருத்தம் நீங்கும்படி
வந்து தோன்றி, Vandhu Thondri - (வாமநனாய்) வந்து அவதரித்து
மாண் உரு ஆய், Maan Uru Aayi - பிரமசாரியாய்
மா வலியை மூ அடி வேண்டி, Maa Valiyai Moo Adi Vendi - மஹாபலியினிடத்தில் மூன்றடி நிலத்தை வேண்டிப்பெற்று
தான், Thaan - தானே
அமர, Amara - (தனது காலடியின் கீழ்) அடங்கும்படி
ஏழ் உலகும் அளந்த, Ezhu Ulagum Alandha - கீழேழ் மேலேழ் என்னம் எல்லா வுலகங்களையும் அளந்து தனதாக்கிக்கொண்ட
வென்றி தனி முதல் சக்கரம் படை, Vendri Thani Mudhal Chakkaram Padai - வெற்றியையுடையதும் ஒப்பற்றதும் (ஆயுதங்களிற்) பிரதானமுமான சக்ராயுதத்தைக் கையிலேந்திய
எம் தலைவன், Em Thalaivan - எமது ஸ்வாமியாவன்.
1624பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் – என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 7
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-7
பதவுரை Show / Hide
செம் தமிழும், Sem Tamizhum - செவ்விய தமிழ்ப்பாஷையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
வடகடலையும், Vadakadalaikum - ஸம்ஸ்க்ருத பாஷையும்
திகழ்ந்த, Thigalntha - விளங்குகின்ற
நாவர், Navar - நாக்கையுடையவர்களும்
திசை முகனை அனையவர்கள், Thisai Mughanai Anaiyavargal - (தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான
செம்மை மிக்க அந்தணர் தம், Semmai Mikka Andhanar Tham - நற்குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணர்களது
ஆகுதியின் புகை ஆர், Aaguthin Pugai Aar - ஹோம்ஞ்செய்வதனால் தோன்றுகின்ற புகை நிரம்பப்பெற்றுள்ள
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி, Pandhu Anaindha Mel Viralal Seethaikku Aagi - பந்து பொருந்திய மெல்லிய கை விரல்களையுடைய சீதையின் நிமித்தம்
மீது பகலவன் இயங்காத இலங்கை வேந்தன், Meethu Pakalavan Iyangaadha Ilangai Vendan - (தனக்கு நேராக) மேலிடத்திலே (அச்சத்தினால்) ஸூர்யனும் ஸஞ்சரிக்கமாட்டாத இலங்கைக்கு அரசனான இராவணனது.
அந்தம் இல் திண் கரம் சிரங்கள், Andham Il Thin Karam Sirangal - அழிவில்லாத வலிய தோள்களும் தலைகளும்
புரண்டு வீழ, Purandu Veela - (அறுபட்டுக்)கீழ் விழுந்து புரளும்படி
அடு கணையால், Adu Kanaiyaal - கொல்லுந் தன்மையுள்ள அம்பினால்
எய்து, Eydhu - பிரயோகித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்த
அம்மான், Ammaan - தலைவனாவான்.
1625பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுகூல ஸ்பர்சம் ஒழிய த்ரவ்யம் ஒழிய செல்லாமையாலே பரிமள பிரசுரமான பூவை உடைத்தான குழலை உடைய யசோதை பிராட்டி வைத்த தயிரையும் வெண்ணெயும் அமுது செய்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாக இருக்கிற ஆச்சர்ய பூதன் கிடீர்) 8
கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை யடர்த்துக் குரவை கோத்து வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின் செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8
பதவுரை Show / Hide
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம், Sem Pavalam Maradhagam Nal Muththam Kaata Thigazh Poogam - செந்நிறமன பவழத்தையும் (பசுநிறமான) மரகதத்தையும் (வெண்ணிறமான) முத்தையும் தம்மிடத்தில் தோற்றும்படி விளங்குகின்ற பாக்குமரங்களும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-;  (யாவனென்னில்;))
பல கதலி, Pala Kathali - பல வாழை மரங்களும்
வளம் மிக்க, Valam Mikka - செழிப்பு மிகுந்து,
எங்கும், Engum - எல்லாப் பக்கங்களிலும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து, Am Pon Mathil Pozhil Pudai Soozhndhu - அழகிய பொன் மயமான மதிள்களாலும் சோலைகளாலும் சுற்றிலும் சூழப்பெற்று
அழகு ஆர், Azhagu Aar - அதனால் அழகு நிறைந்த
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
கும்பம் மிகு, Kumbam Miku - மஸ்தகம் பருத்திருக்கப் பெற்றதாய்
மதம், Matham - மதத்தையுடைத்தான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானை
குலைய, Kulaiya - அழியும்படி
கொம்பு பறித்து, Kombu Pariththu - அதன் தந்தங்களைப் பறித்தும்
மழவிடை அடர்த்து, Mazhavidai Adarththu - இளமையான ஏழு எருதுகளை வலியடக்கியும்
குரவை கோத்து, Kuravai Koathu - (ஆய்ச்சியரோடு) குரவைக் கூத்தாடியும்
வம்பு அவிழும், Vambu Avizhum - நறுமணம் வீசுகின்ற
மலர், Malar - மலர்களைச் சூடியுள்ள
குழலாள், Kuzhalal - கூந்தலை யுடையவளாகிய
ஆய்ச்சி, Aaychi - யசோதையென்னும் இடைச்சி
வைத்த, Vaiththa - (உறிகளில் சேமித்து) வைத்திருந்த
தயிர், Thayir - தயிரையும்
வெண்ணெய், Vennaiy - வெண்ணெயையும்
உண்டு, Undu - புஜித்தும்
உகந்த, Ugantha - மனமகிழ்ந்திருந்த
மாயோன் காண்மின், Maayon Kaanmin - விசித்ர சக்தியை யுடையவன்
1626பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் செல்ல நாள் செல்ல மிடுக்கு ஏறி வாரா நிற்பதான தோளை உடையனாய் விஜயமானது எப்போதும் ஒக்க வர்த்தியா நின்ற புகழை உடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடைய சர்வாதிகன் கிடீர்) 9
ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் – சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில் மணியணிந்த திண்ணை தோறும் ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-9
பதவுரை Show / Hide
சேடு ஏறு, Sedu Aeru - இளமைமிக்குத் தோன்றுகின்ற (- அணி அழுந்தூர்  நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
பொழில், Pozhil - சோலைகளால்
தழுவும், Thazhuvum - அணையப்பெற்ற
எழில் கொள் வீதி, Ezhil Kol Veethi - அழகிய தெருக்களிலே நடக்கின்ற
திரு விழவில், Thiru Vizhavill - திருவிழாக்களிலே
மணி அணிந்த திண்ணை தோறும், Mani Anintha Thinnai Thoram - ரத்நங்கள் பதிக்கப்பெற்ற திண்ணைகளிலெல்லாம்
ஆடு எறு, Aadu Eru - கூத்தாடும் தொழிலில் வல்லவர்களான
மலர் குழலார், Malar Kuzhalar - மலர்களையணிந்த கூந்தலை யுடைய மகளிர்
பயிலும், Payilum - நெருங்கியிருக்கப்பெற்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
ஊடு ஏறு கஞ்சனொடு, Oodu Aeru Kanjanodu - (மஞ்சத்தில்) மத்தியில் ஏறியுள்ள கம்ஸனும்
மல்லும், Mallum - மல்லர்களும்
வில்லும், Villum - (தனுர்யாகத்தில் வைக்கப்பட்டிருந்த) வில்லும்
ஒள் கரியும், Ol Kariyum - அழகிய (குவலயாபீடமென்னும்) யானையும்
உருள் சகடும், Urul Sakadum - உருண்டு செல்லுந் தன்மைய தான சகடமும்
உடைய, Udaiya - அழிந்தொழியும்படி
செற்ற, Settra - அழித்திட்ட
நீடு ஏறு பெருவலி தோள் உடைய, Needu Aeru Peruvazhi Thol Udaiya - நீண்டு உயர்ந்துள்ள மிக்க வலிமைகொண்ட தோள்களையுடையவனும்
வென்றி நிலவு புகழ் நேமி அம் கை, Vendri Nilavu Pugazh Nemi Am Kai - வெற்றியினால் விளங்குகின்ற புகழையும் சக்கரமேந்திய கைகளையுமுடையனுமான
நெடியோன், Nediyon - பரமபுருஷனானவன்.
1627பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில்தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –ஸ்ரீ திரு வழுந்தூரிலே நின்று அருளின சர்வாதிகன் ஆனவனை – இப்பத்தையும் வல்லார்-ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்-என்று தாம் சேர்த்து அனுபவித்த பிரகாரம் இருக்கிறபடி – முதல் பாட்டு -ஸ்ரீ ஷீரார்ணவம்/ 2-4-5-10—திர்யக் திருவவதாரம் -நான்கு பாடல்களிலும் ஸ்ரீ கஜேந்திர ரஷணம் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண திரு வவதாரம் -மீது ஐந்து பாசுரங்கள் இவற்றை அப்யசிக்க வல்லாருக்கு ப்ரஹ்மாதிகள் உடைய பதம் உண்டாக முன்னம் தட்டில்லை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தாம் பாகவத சேஷத்வம் ஆக்குகைக்கு உடலாய் இருக்கையாலே ஐஸ்வர் யத்தையும் ஆதரித்து அருளினார் என்று அருளிச் செய்வர்) 10
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல் ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
பன்றி ஆய், Panri Aayi - வராஹாவதாரமாகியும்
மீன் ஆகி, Meen Aagi - மத்ஸ்யாவதாரமாகியும்
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹாவதாரமாகியும்
பாரை, Paarai - நிலவுலகத்தை
படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும்
காத்து, Kaathu - ரக்ஷித்தும்
உண்டு, Undu - பிரளய காலத்தில் உட்கொண்டும்
உமிழ்ந்த, Umizhndha - (அந்தப்பிரளயம் நீங்கினவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்துமருளிய
பரமன் தன்னை, Paraman Thannai - பரம்பொருளானவனும்
அமரர்க்கு அதிபதியும், Amararukku Adhipathiyum - தேவர்கட்குத் தலைவனான இந்திரனென்ன
அயனும், Ayanum - பிரம்மதேவனென்ன
சேயும், Seyum - அவனது மகனான சிவபிரானென்ன ஆகிய இவர்கள்
அடிபணிய, Adhipaniya - தனது திருவடிகளை வணங்கும்படி
அணி அழுந்தூர் நின்ற, Ani Azhundhoor Nindra - திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற
கோவை, Kovai - தேவாதிதேவனுமான எம்பெருமானைப்பற்றி
கன்றி நெடு வேல் வலவன், Kandri Nedhu Vel Valavan - சினங்கொண்டு நீண்டுள்ள வேற்படையில் வல்லவரும்
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
கலிகன்றி, Kalikanri - கலிகன்றியென்னும் திருநாமமுடையவருமான திருமங்கை யாழ்வார்
ஒலிசெய்த, Oliseitha - இன்னோசையுடையனவாம்படி பாடியருளிய
இன்பம் பாடல், Inbam Paadal - மதுரமான பாடல்களான
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும், Ondrinodu Naangum Oru Aindhum - இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallar - ஓதியுணர்ந்தவர்கள்
ஒலிகடல் சூழ், Olikaadal Soozh - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட
உலகு, Ulaku - இவ்வுலகங்களை
ஆளும், Aalum - ஆளவல்ல
உம்பர் தாம், Umbar Thaam - தேவர்களாவர்.