திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-6 தொண்டீர் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1698பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று – அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம்) 1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondheer - பகவத் கைங்கரியத்தில் ருசி யுடையீர்காள்! (- (இவர்களுடைய))
உய்யும் வகை, Uyum Vagai - உஜ்ஜீவிக்கும் வழியை
கண்டேன், Kandein - தெரிந்து கொண்டேன்;
முன், Mun - முற்காலத்தில்
துளங்கா அரக்கர், Thulanga Arakkar - ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத ராக்ஷஸர்கள்
துளங்க, Thulanga - கஷ்டப்படும்படியாக
திண் தோள் நிமிர, Thin Thol Nimira - வலிமை பொருந்திய திருத்தோள்கள் நிமிரவும்
சிலை வளைய, Silai Valaiya - வில்வளையவும்
சிறிதே முனிந்த, Siridhe Munintha - ஸ்வல்பமான சீற்றமே கொண்டவனாய்
திரு மார்பன், Thiru Maarban - லக்ஷ்மியைத் திருமார்பிலே உடையவனாய்,
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை, Vandu Aar Koondhal Malar Mangai - வண்டுகள் படிந்த கூந்தலையுடைய பெரிய பிராட்டியாரென்ன
வடி கண் மடந்தை, Vadi Kan Madanthai - கூர்மை பொருந்திய திருக்கண்களையுடைய பூமிப்பிராட்டியாரென்ன
மா நோக்கம் கண்டான், Maa Nokkam Kandan - சிறந்த கடைக்கண் பார்வையை அனுபவிப்பவனான எம்பெருமான்
கண்டு கொண்டு உகந்த, Kandu Konda Ugantha - (நித்யவாஸத்திற்குப் பாங்கான இடமென்று) திருவுள்ளம் பற்றி மகிழ்ந்து உறையுமிடமான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தோழுவோம்
1699பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார்) 2
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக் கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில், (- (கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்திலே
பொருத்தா அரக்கர், Poruththa Arakkar - சத்ருக்களான ராக்ஷஸர்கள்
பொன்ற, Pondra - முடியும்படியாக
புள் ஊர்ந்து, Pul Oornthu - கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி
பெரு தோள் மாலி, Peru Thol Maali - வலிய தோள்களையுடையனான மாலியினுடைய
தலை, Thalai - தலையானது
புரள, Purala - (அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும்
பேர்ந்த அரக்கர், Perntha Arakkar - அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள்
தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு, Then Ilangai Irundhaar Thammai Udhan Kondo - தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு
அங்கு, Angu - அவ்விடத்திலிருந்து
எழில் ஆர்பிலத்து, Ezhil Aarbilathu - அழகிய பாதாளத்திலே
புக்கு ஒளிப்ப, Pukku Olippa - புகுந்து மறையும்படியாகவும்
கருந் தாள் சிலை, Karun Thaal Silai - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை
கை கொண்டான், Kai Kondaaan - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய
ஊர், Oor - இருப்பிடமான
1700பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது) 3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-3
பதவுரை Show / Hide
வல்லி இடையாள் பொருட்டாக, Valli Idaiyaal Porutthaga - கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, (- (ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
நீர், Neer - கடலை அகழாகவுடையதாய்
மதிள், Mathil - மதிள்களையுமுடைத்தான
இலங்கையர், Ilangaiyar - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு
கோவை, Kovai - தலைவனான இராவணனை
அல்லல் செய்து, Allal Seidhu - துன்பப்படுத்தி
வெம் சமத்துள், Vem Samaththul - வெவ்விய போர்க்களத்திலே
ஆற்றல் மிகுந்த, Aatral Mikuntha - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின
ஆற்றலான், Aatralan - மஹா வீரனும்
வல் ஆள் அரக்கர், Val Aal Arakkar - வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின்
குலம், Kulam - குலத்தில் தோன்றிய
பாவை, Pavai - தாடகை யென்னும் அரக்கியை
வாட, Vaada - முடிய (ச் செய்து)
முனி தன், Muni Than - விச்வாமித்ர முனியினுடைய
வேள்வியை, Velviyai - யாகத்தை
கல்வி சிலையால், Kalvi Silaiyaal - தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு
காத்தான், Kaaththaan - காத்தருளினவனுமான பெருமானுடைய
1701பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 4
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4
பதவுரை Show / Hide
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய (- (அதற்காக) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
புகல் உற்று, Pugal Utru - பிரவேசிக்கவேண்டி
மல்லை முந்நீர், Mallai Munnir - செழி்ப்பான கடலானது
அதர் பட, Adhar Pada - வழிபடும்படியாக
வரி வெம் சிலை, Vari Vem Silai - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை
கால் விளை வித்து, Kaal Vilai Viththu - வளையச்செய்து
கொல்லை விலங்கு, Kollai Vilangu - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்)
பணி செய்ய, Pani Seyya - கைங்கரியம் பண்ண
தொல்லை மரங்கள், Thollai Marangal - பழைய மரங்களையும்
புகப் பெய்து, Pugap Peidhu - கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு
துவலை, Thuvilai - திவலைகள்
நிமிர்ந்து, Nimirndhu - கிளர்ந்து
வான், Vaan - ஆகாசத்திலே
அணவ, Anava - அளாவும்படியாக
கல்லால், Kallal - மலைகளைக் கொண்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்தான், Adaiththaan - அணைசெய்த எம்பெருமானுடைய
1702பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று) 5
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-5
பதவுரை Show / Hide
ஆமை ஆகி, Aamai Aagi - கூர்மரூபியாயும் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
அரி ஆகி, Ari Aagi - நரஸிம்ஹரூபியாயும்
அன்னம் ஆகி, Annam Aagi - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)
அந்தணர் தம், Andhanar Tham - பிராமணர்களினுடைய
ஓமம் ஆகி, Oomam Aagi - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்
ஊழி ஆகி, Oozhi Aagi - பிரளயகாலத்திலு முள்ளவனும்
நெடு புணரி, Nedu Punari - ஓங்கின அலைகளையுடைத்தான
உவரி, Uvari - கடலினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதும்
சேமம் மதிள் சூழ், Semam Mathil Sozh - காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான
இலங்கை, Ilankai - லங்காபுரிக்கு
கோன், Koon - தலைவனான இராவணனுடைய
சிரமும், Siramum - தலைகளையும்
கரமும், Karumum - தோள்களையும்
துணித்து, Thuniththu - அறுத்தொழித்தவனும்,
முன், Mun - முன்பொருகால்
காமன், Kaaman - மன்மதனை
பயந்தான், Payandhaan - பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான்
கருதும், Karudum - திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற
1703பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர்) 6
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள் பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-6
பதவுரை Show / Hide
மட நெஞ்சே, Mada Nenje - ஸாதுவான நெஞ்சே! (- (ஊர், கண்ணபுரம் நாம், தொழுதும்-))
நீ வருந்தாது இரு, Nee Varundhaathu Iru - நீ வருத்தப்படாமலிரு;
நம் மேல், Nam Mel - நம்மிடத்து
வினைகள், Vinaigal - பாவங்களின் பலன் ஒன்றும்
வாரா, Vaaraa - வந்து சேரமாட்டாது; (ஏனென்றால்)
முன், Mun - முன்னே
திருந்தா அரக்கர், Thirundhaa Arakkar - திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்காபுரியை
செம் தீ உண்ண, Sem Thee Unna - சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக
சிவந்து, Sivandhu - சீற்றங்கொண்டவனும்
ஒரு நாள், Oru Naal - மற்றொருகாலத்தில்
பெரு தோள் வாணற்கு, Peru Thol Vaanarku - பெரிய தோள்களையுடைய பாணாஸுரன் விஷயத்தில்
அருள் புரிந்து, Arul Purindhu - (உயிரைக் கவராது விட்டிடுகை யாகிற) கிருபையைச் செய்தருளினவனும்
பின்னை மணாளன் ஆகி, Pinnai Manaalan Aagi - நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும்
முன், Mun - முன்பொருகால்
கரு தாள், Karuthaal - வலிமையுள்ள கால்களையுடைய
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையை
ஒசித்தான், Osiththaan - தொலைத்தவனுமான பெருமானுடைய
1704பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும் அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன்) 7
இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான் அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-7
பதவுரை Show / Hide
கொலை ஆர் வேழம், Kolai Ar Vezham - (கஜேந்திராழ்வான்) கொலைத் தொழிலை இயற்கையாக வுடைய யானை (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலை ஆர், Ilai Ar - இலைகள் நிரம்பிய
மலர், Malar - மலர்களையுடைத்தான
பூ, Poo - அழகிய
பொய்கை வாய், Poykai Vaai - தடாகத்திலே
முதலை தன்னால், Muthalai Thannal - முதலையினால்
அடர்ப்புண்டு, Adarppundhu - துன்பமடைந்து
கடுக்குற்று, Kadakku Kutral - நடுங்கி
குலைய, Kulaiya - கையோய்ந்து நிற்க,
அதனுக்கு, Adhanukku - அவ்யானைக்கு
அருள் புரிந்தான், Arul Purindhaan - கிருபைபண்ணி யருளினவனும்,
அலை நீர் இலங்கை, Alai Neer Ilangai - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான
தசக்ரீவற்கு, Dasakreevarukku - இராவணனுடைய
இளையோற்கு, Ilaiyorukku - தம்பியான விபீஷணனுக்கு
அரசை அருளி, Arasai Aruli - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும்
முன், Mun - அதற்கு முன்பே
கலைமா, Kalaimaa - (மாரீசனாகிற) மானை
சிலையால், Silaigal - ஒரு வில்லாலே
எய்தான், Eydhaan - அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய
தசக்கிரீவன், Dasakreevan - வடசொல் விகாரம்.
1705பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் – ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று பிராப்ய ஆபாசங்களையும் விட்டு சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் – எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை உண்டாகையாலே எங்கனே வந்து இருப்பது என்ன ஸ்ரீ பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் – நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்) 8
மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க காலார் மறுத்தும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-8
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சே! (- வருந்தாது இரு வருத்தப்படாமலிரு; (ஏனென்றால்) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
நீ, Nee - நீ
மால் ஆய், Maal Aay - மயக்கங்கொண்டு
அரு துயரில், Aru Thuyaril - அநுபவித்து முடிக்கப் போகாத துக்கங்களில் (ஈடுபட்டு)
வலி மிக்க, Vali Mikka - மிருந்த வலிமையையுடையதாய்
கால் ஆர், Kaal Aar - வேரூன்றியிருந்ததான
மருதும், Maruthum - இரட்டை மருதமரத்தையும்
காய் சினத்த, Kaai Sinath - மிகுந்த கோபங்கொண்டு வந்த
கழுதும், Kazhudum - பேய்ச்சியாகிய பூதனையையும்
கதம், Katham - கோபத்தையுடைய
மா, Maa - (சேசியென்னும்) குதிரையையும்
கழுதையும், Kazhudaiyum - கழுதைவடிவங் கொண்டுவந்த தேநுகாஸுரனையும்
மால் ஆர் விடையும், Maal Aar Vidaiyum - பெரிய வடிவம் பூண்டுவந்த விருஷபங்களையும்
மத கரியும், Madha Kariyum - (குவலயாபீடமென்னும்) மதயானையையும்
மல்லர் உயிரும், Mallar Uyirum - மல்லர்களின் உயிரையும்
மடிவித்து, Madiviththu - முடித்தவனும்
காலால், Kaalal - திருவடியினால்
சகடம், Sakadam - சகடாஸுரனை
பாய்ந்தான், Paayndhaan - பாய்ந்து முடித்தவனுமான பெருமானுடைய
1706பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த – ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 9
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக் கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-9
பதவுரை Show / Hide
குன்றால், Kundraal - கோவர்த்தன மலையினால் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
மாரி, Maari - பெருமழையை
பழுது ஆக்கி, Pazhuthu Aakki - பயனற்றதாம்படி செய்தவனும்
அன்று, Andru - முன்பொருகால்,
கொடி ஏர் இடையாள் பொருட்டாக, Kodi Aer Idaiyaal Porutthaga - கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் தாள் ஏழ் விடை, Val Thaal Ezh Vidai - வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை
அடர்த்த, Adarttha - வலியடக்கினவனும்
வானோர் பெருமான், Vaanor Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்
பஞ்சவர்க்கு ஆய், Panchavarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்றான், Thoodhu Senraan - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்
திரி கால் சகடம், Thiri Kaal Sakadham - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்
சினம், Sinam - பகையை
அழித்து, Azhiththu - அழித்தவனும்
கன்றால், Kanraal - வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்காய் எறிந்தான், Vilangaai Erindhaan - கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய
1707பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார்) 10
கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன் மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10
பதவுரை Show / Hide
கரு மா முகில், Karumaa Mukil - கறுத்துப் பெருத்தமேகங்கள் (- (மேல் பரமபதத்திலுஞ்சென்று))
தோய், Thoy - வந்து படியப் பெற்ற
நெடு மாடம், Nedu Maadam - பெரிய மாளிகைகளையுடைத்தான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக,
திருமாமகளால், Thirumaamagalal - பெரிய பிராட்டியாரடியாக
அருள்மாரி, Arulmaari - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும்
செழு நீர் ஆலி வளம் நாடன், Sezhu Neer Aali Valam Naadan - ஜலஸம்ருத்தியையுடைய திருவாலி வளநாட்டுக்குத் தலைவரும்
மருவு ஆர் புயல் கை, Maruvu Aar Puyal Kai - எப்போதும் நிலைத்திருக்குந் தன்மைவாய்ந்த காளமேகத்தோடொத்த ஔதார்யத்தை யுடையவரும்
மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்குப் பிரபுவுமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அருளிச்செய்த
ஒலி, Oli - இப்பாசுரங்களை
வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி, Iru Maa Nilaththukku Arasu Aagi - (பூமியும் ஸ்வர்க்கமுமாகிற) இரண்டு உலகங்களுக்கும் அரசராயிருக்கப்பெற்று,
இமையோர், Imaiyor - நித்தியமுக்தர்கள்
இறைஞ்ச, Irainj - ஸத்கரிக்கும்படி
வாழ்வார், Vazhvar - வாழப்பெறுவர்கள்.