Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சன்மம் பலபல (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2996திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 1
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1
பலபல,Palapala - பலபல வகைப்பட்ட
சன்மம்,Sanmam - அவதாரங்களை
செய்து,Seidhu - பண்ணி
வெளிப்பட்டு,Velippattu - ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு
சங்கொடு சக்கரம்,Sangodu sakkaram - சங்கு சக்கரங்களையும்
வில்,Vil - சார்ங்கத்தையும்
ஒண்மை உடைய,Onmai udaiya - ஒளி பொருந்திய
உலக்கை,Ulakkai - முஸலத்தையும்
ஒள் வாள்,Ol vaal - அழகிய கந்தக வாளையும்
தண்டு,Thandu - கௌமோதகி யென்னும் கதையையும்
கொண்டு,Kondu - ஏந்திக்கொண்டு
புள் ஊர்ந்து,Pul oornthu - பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு
உலகில்,Ulagil - உலகத்திலுள்ள
வன்மை உடைய,Vanmai udaiya - கடினமான மனமுடைய
அரக்கர்,Arakkar - அரக்கர்களும்
அசுரர்,Asurar - அசுரர்களம்
மாள,Maala - மாண்டொழியும்படி
படை பொருத,Padai porudha - ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து தொலைத்து
நன்மை உடையவன்,Nanmai udaiyavan - நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக்குணங்களை
பரவ பெற்ற நான்,Parava petra naan - துதிக்கப்பெற்ற அடியேன்
ஓர் குறையு இலன்,Or kuraiyu ilan - ஒரு குறையுமுடையே னல்லேன்.
2997திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார்.) 2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2
குறைவு இல் தட கடல்,Kuraivu il thada kadal - குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே
கோள் அரவு ஏறி,Kol aravu eri - மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி
தன்,Than - தன்னுடைய
கோலம்,Kolam - அழகிய
செம் தாமரை கண்,Sem thaamarai kan - செந்தாமரை போன்ற திருக்கண்கள்
உறைபவன் போல,Uraipavan pola - துயிலப் பெற்றவன் போல
ஓர் யோகு புணர்ந்த,Or yogu punarntha - யோக நித்திரை செய்தருள்கின்ற
ஒளி மணிவண்ணன்,Oli manivannan - அழகிய நீலமணி போன்ற நிறத்தனும்
கண்ணன்,Kannan - கண்ணனாய்த் திருவவதரித்தவனும்
கறை அணி மூக்கு உடை,Karai ani mookku udai - கறையை அணிந்த மூக்குடையவனான
புள்ளை,Pullai - பக்ஷி ராஜனை
கடாவி,Kadaavi - நடத்தி
அசுரரை காய்ந்த,Asurarai kaaintha - அசுரர்களை முடித்தவனுமான
அம்மான்,Ammaan - எம்பெருமானுடைய
நிறை புகழ்,Nirai pugazh - நிறைந்த புகழை
யான்,Yaan - நான்
ஏத்தியும்,yethiyum - துதித்தும்
பாடியும்,Paadiyum - இசையில் அமைத்துப் பாடியும்
ஆடியும்,Aadiyum - கூத்தாடியும்
ஒரு முட்டு இலன்,Oru muttu ilan - (எம்பெருமானை யநுபவிப்பதில் ) ஒரு தடையுமுடையேனல்லேன்.
2998திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (எம்பெருமானுடைய போக்யதையை அநுஸந்தித்து அவனுக்கு அடிமை செய்வதிலேயே ஊன்றியிருக்குமெனக்கு ஒரு அச்சமுமில்லையென்கிறார்.) 3
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3
முட்டு இல்,Muttu il - இடையூறொன்றுமில்லாத
பல் போகத்து,Pal pogaththu - பலவகையான போகங்களையுடையவனும்
ஒரு தனி நாயகன்,Oru thani nayakan - ஒப்பற்ற தலைவனும்
மூ உலகுக்கு உரிய,Moo ulakukku uriya - மூவுலகத்தவர்கட்கும் பொதுவிலே போக்யமான
கட்டியை,Kattiyai - கருப்பங்கட்டி போன்றவனும்
தேனை,Thenai - தேன் போன்றவனும்
அமுதை,Amuthai - அமிருதம் போன்றவனும்
நல் பாலை,Nal paalai - நல்ல பால்போன்றவனும்
கனியை,Kaniyai - கனி போன்றவனும்
கரும்பு தன்னை,Karumbu thannai - கரும்பு போன்றவனுமாய்
மட்டு அவிழ்,Mattu avizh - மது பெருகப்பெற்ற
தண் அம் துழாய் முடியானை,Than am thulazhai mudiyaanai - குளிந்தழகிய திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்த வனுமான எம்பெருமானை
வணங்கி,Vanangi - நமஸ்கரித்து
அவன் திறத்து,Avan thirathu - அவன் விஷயத்திலே
பட்ட பின்னை,Patta pinnai - ஆட்பட்டோனாதாலால்
யான்,Yaan - இப்படிப்பட்ட அடியேன்
இறை ஆகிலும்,Irai akilum - சிறிதளவும்
என் மனத்து,En manathu - என் மனத்தில்
பரிவு இலன்,Parivu ilan - பீடையையுடையே னல்லேன்.
2999திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவர்கள் ரக்ஷகரல்லர் என்பதையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் கைவிடுவதில்லையென்பதையும் நன்கு காட்டிக்கொடுத்த எம்பெருமானைப் பற்றினவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 4
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4
அன்று,Anru - முன்பொருகாலத்தில்
வாணனை,Vaananai - பாணாசுரனை
பரிவு இன்றி,Parivu indri - வருத்தமின்றியே
காத்தும் என்று,Kaaththum enru - ‘காக்கக்கடவோம்’ என்று அபிமானித்து
படையொடுங்,Padaiyodung - ஆயுதங்களோடு கூட
வந்து எதிர்ந்த,Vandhu ethirntha - வந்து எதிரிட்ட
திரிபுரம் பெற்றவனும்,Thiripuram petrravanum - த்ரிபுரதஹநம் செய்தவனான சிவபிரானும்
மகனும்,Makanum - அவன் மகனான ஆறுமுகனும்
பின்னும்,Pinnum - அதற்குமேலே
அங்கியும்,Angiyum - அக்நியும்
போர்,Por - போர்க்களத்திலே
தொலைய,Tholaiya - பங்கமடையும்படி,
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை,Poru sirai pullai kadaviya maayanai - பொருநின்ற சிறகையுடைய பக்ஷிராஜனை கடத்திய ஆச்சர்ய சக்தியுக்தனும்
ஆயனை,Aayanai - கோபாலக்ருஷ்ணனாய் அவதரித்தவனும்
பொன்சக்கரத்து,Ponsakkarathu - அழகிய திருவாழியையுடையவனாய்க் கொண்டு
அரியினை,Ariyinai - விரோதிகளை அழியச் செய்பவனும்
அச்சுதனை,Achchuthanai - அடியார்களைக் கைவிடாதவனுமான எம்பெருமானை
பற்றி,Patri - அடைந்து
யான்,Yaan - அடியேன்
இறையேனும்,Iraiyenum - சிறிதளவும்
இடம் இவன்,Idam ivan - இடைஞ்சலுடையே னல்லேன்.
3000திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார்.) 5
இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5
ஒருநாள்,Orunaal - ஒரு நாளிலே
ஒரு போழ்தில்,Oru pozhdhil - ஒரு அவஸரத்திலே
எல்லா உலகும் கழிய,Ellaa ulagam kazhiya - எல்லா வுலகங்களுக்கும் அப்பால்போம்படியாக,
படர் புகழ் பார்த்தனும்,Padar pugazh paarthanum - பரம்பின புகழை யுடையனான அர்ஜுநனும்
வைதிகனும்,Vaidhikanum - வைதிகப்பிராமணனும்
உடன் ஏற,Udan era - கூடவே ஏறி வரும்படி
இடர் இன்றியே,Idar indriye - இடைஞ்சல் ஒன்றுமின்றி
திண் தேர் கடவி,Thin ther kadavi - திடமான திருத்தேரைச் செலுத்தி
சுடர் ஒளி ஆய்கின்ற,Sudar oli aayginra - மிகவும் சிறந்த தேஜோ மயமாயிராநின்ற
தன்னுடை சோதியில்,Thannudai sothiyil - தன்னுடையதாய் பரஞ்சோதியெனப்படுமதான திருநாட்டிலே
வைதிகன் பிள்ளகைளை,Vaidhikan pillakalai - அந்த வைதிகனுடைய பிள்ளைகள் நால்வரையும்
உடலொடும்,Udalodum - அவ்வுடம்போதே
கொண்டு கொடுத்தவனை,Kondu koduththavanai - மீட்டுக்கொணர்ந்து கொடுத்தருளின பெருமானை
பற்றி,Patri - அடைந்து (அதனால்)
ஒன்றும் துயர் இலன்,Ondrum thuyar ilan - சிறிதும் துயமுடையே னல்லேன்
3001திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தன்னுடைய அப்ராக்ருதமான திவ்யமான விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகளின் கட்புலனுக்கு இலக்காக்கி வைத்த கண்ணபிரானுடைய திருக்குணங்களை அனுபவிக்கப் பெற்றவெனக்கு ஒரு துன்பமுமில்லை யென்கிறார்.) 6
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6
துயர் இல்,Thuyar il - துன்பமுற்றதும்
சுடர் ஒளி,Sudar oli - சிறந்த தேஜோரூபமுமான
தன்னுடைய சோதி,Thannudaiya sothi - தன்னுடைய விக்ரஹமானது
நின்ற வண்ணமே நிற்க,Nindra vannamae nirka - அங்கு இருக்கும்படியிலொன்றுங் குறையாமே நிற்கும்படியாக
துயரில் மலியும் மனிசப் பிறவியில் தோன்றி,Thuyaril maliya manisap piraviyil thonri - துக்கத்திலே யழுந்தின மனிதருடைய னோனிகளிலே பிறந்து.
கண் காண வந்து,Kan kaana vandhu - (அனைவரும்) கண்ணாற் காணும்டியாக வந்து
துயரங்கள் செய்து,Thuyarangal seithu - (அனைவரையும் ) ஈடுபடுத்தி
தன் தெய்வம் நிலை,Than deivam nilai - தன்னுடைய அப்ராக்ருத ஸ்வபாவத்தை
உலகில்,Ulagil - இவ்வுலகத்தின் கண்
புக உய்க்கும்,Puga uykkum - பிரசுரப்படுத்தின
அம்மான்,Ammaan - ஸ்வாமியாய்
துயரம் இல் சீர்,Thuyaram il seer - ஹேய குணங்கள் இன்றிக்கே கல்யாணகுண மயனாய்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனான
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
புகழ்,Pugazh - கீர்த்திகளை
துற்ற யான்,Thutra yaan - அநுபவிக்கப்பெற்றநான்
ஓர் துன்பம் இலன்,Or thunbam ilan - ஒரு துன்பமுமுடையே னல்லேன்
3002திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (புண்யபாய ரூபகருமங்களுக்கும், அவற்றைச் சம்பாதிப்பதற்குரிய இடமான லோகங்களுக்கும், அவற்றின் பலன்களை யனுபவிக்குமிடான லோகங்களுக்கும், அப்பலன்களை அனுபவிக்குமவர்களான ஆன்மாக்களுக்கும் நியாமகனாய் லீலாரஹமநுபவிக்கின்ற எம்பெருமானை யடையப் பெற்றதனால் ஒருவகையான அல்லலும் தமக்கில்லை யென்கிறார்.) 7
துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7
துன்பமும் இன்பமும் ஆகிய,Thunbamum inbamum aagiya - துக்கத்திற்கும் சுகத்திற்கும் காரணமாகக் கூடிய
செய் வினை ஆய்,Sei vinai aay - புண்ய பாபரூப கருமங்களுக்கு நிர்வாஹனாய்
இனிய நல்வான் சுவர்க்கங்களும் ஆய்,Iniya nalvaan suvarkkangallum aay - மிகவும் நன்றாய்ச் சிறந்த ஸ்வர்க்க ப்ரதேசங்களுக்கும் நிர்வாஹகனாய்
மன் பல் உயிர்களும் ஆகி,Man pal uyirkalum aagi - நித்யரான வல பிராணிகளுக்கும் நிர்வாஹகனாய்
பல பல மாயம் மயக்குக்களால்,Pala pala maayam mayakkukkalal - பலவகைப்பட்ட ப்ரக்ருதி விகாரரூபமான மோஹ விகாரங்களாலே
உலகங்களும் ஆய்,Ulagangalum aay - உலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
இன்பம் இல் வெம் நரக ஆகி,Inbam il vem naraga aagi - இன்பமற்றகொடிய நரகலோகத்திற்கும் நிர்வாஹகனாய்
இன்பு உறும் இ விளையாட்டு உடையானை,Inbu urum i vilaiyaattu udaiyanai - ரஸாவஹமான விளையாடல்களை யுடையவனான எம்பெருமானை
பெற்று,Petru - அநுபவிக்கப்பெற்றதனால்
ஏதும் அல்லல் இலன்,Edhum allal ilan - சிறிதும் துக்கமுடையே னல்லலேன்
3003திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (முன்னரண்டிகளால்-திருநாட்டில் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிருப்பையும், பின்னடிகளால்-அவன் இந்நிலத்திற் செய்தருளுஞ் செயல்களையும் பேசி, இப்படிப்பட்ட எம்பெருமானையடையப் பெற்றதனால் தமக்கு யாதொரு துக்கமுமில்லையென்கிறார்.) 8
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8
அல்லல் இல் இன்பம்,Allal il inbam - வருத்தம் சிறிதுங்கலசாத ஆனந்தகுணம்
அளவு இறந்து,Alavu irandhu - அளவில்லாமல் இருக்கப்பெற்று
எங்கும் அமர்,Engum amar - எங்கும் பரம்பின
அழகு சூழ் ஒளியன்,Azhagu soozh oliyan - ஸௌந்தர்யத்தோடு சேர்ந்த லாவண்யமத்தையுடையவனாய்
அல்லி மலர் மகள்,Alli malar magal - தாமரை மலரில் தோன்றிய பெரிய பிராட்டியோடு
போகம்,Bogam - ஆனந்தானுபவத்தினாலுண்டாகிய
மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்,Mayakkugal aagiyum nirkum ammaan - வியாமோஹமே வடிவெடுத்திருக்கின்ற பெருமானாய்
எல்லை இல் ஞானத்தன்,Ellai il gnanathan - எல்லையில்லாத ஞான விளக்கத்தையுடையனாய்
ஞானம் அஃதே கொண்டு,Gnanam akthey kondu - அந்த ஞானத்øதையே கருவியாகக் கொண்டு
கருமங்கல் எல்லாமும் செய்,Karumangal ellaamum sei - காரிவுலகங்களையெல்லாம் உண்டாக்குமவனாய்
எல்லை இல்மாயனை,Ellai ilmaayanai - எல்லையில்லத ஆச்சரியசேஷ்டிதங்களையுடையவனான
கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை
தாள் பற்றி,Thaal patri - திருவடி தொழுது
யான் ஓர் துக்கம் இலன்,Yaan or thukkam ilan - நான் ஒரு துக்கமுமுடைய னல்லேன்
3004திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (சிவன் பிரமன் முதலாய எல்லாரையும் மற்று மெல்லாப் பொருள்களையும் பிரளயங் கொள்ளாமே திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமானை நான் அடையப் பெற்றதனால் ஒரு தளர்வுமுடையே னல்லேன் என்றாராயிற்று.) 9
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9
துக்கம் இல் ஞானம்,Thukkam il gnanam - அஜ்ஞானம் கலசாத ஞானத்தை யுடையனாய்
சுடர் ஒளி மூர்த்தி,Sudar oli moorthi - மிகுந்த தேஜோரூபமான விக்ரஹத்தையுடையனாய்
துழாய் அலங்கல் பெருமான்,Thulasi alangal perumaan - திருத்துழாய் மாலையையணிந்த பெருமானாய்,
மிக்க பல்மாயங்களால்,Mikka palmaayangalal - மிகப் பலவகைப்பட்ட ஆச்சரிய சக்திகளாலே
வேண்டும் உருவு கொண்டு,Vendum uruvu kondu - இஷ்டமான உருவங்களைப் பரிக்ரஹித்து
விகிருதம் செய்து,Vikrutham seithu - விலக்ஷணசேஷ்டிதங்களைச் செய்யுமவனாய்,
நக்கபிரானோடு,Nakkabiraanodu - திகம்பரச் சாமியான சிவபெருமானும்
அயன்,Ayan - பிரமனும்
முதல் ஆக,Mudhal aaga - முதலாக
எல்லாரும்,Ellarum - சேதநர்களெல்லாரையும்
எவையும்,Evaiyum - அசேதனங்களெல்லாவற்றையும்
ஒக்க,Okka - ஒரு சேர
தன்னுள் ஒடுங்க,Thannul odunga - தனக்குள்ளடங்குமாறு
விழுங்க வல்லானை பெற்று,Vizhunga vallaanaipetru - (பிரளகாலத்தில்) விழுங்கி ரக்ஷிக்கவல்லவனான எம்பெருமானை யடைந்ததனால்
ஒன்றும் தளர்வு இலன்,Ondrum thalarvu ilan - சிறிதும் தளர்ச்சியுடையே னல்லேன்
3005திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (அனைவர்க்கும் அந்தராத்ம பூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார்.) 10
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10
என்றும்,Endrum - எக்காலத்திலும்
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
தளர்வு இன்றியே,Thalarvu indriye - ஆயாஸமில்லாமல்
பரந்த,Parandha - வியாபித்திருக்குமவனாய்,
தனி முதல் ஞானம்,Thani mudhal gnanam - அத்விதீயமாய் ஸமஸ்த காரணமான ஞானமே வடிவெடுத்தவனாய்
அளவு உடை,Alavu udai - அளவுபட்ட
ஐம் புலன்கள்,Aimbulangal - இந்திரியங்கள் ஐந்தினாலும்
அறியாவகையால்,Ariyaavagaiyaal - அறியக்கூடாதபடி
அரு ஆகி நிற்கும்,Aru aagi nirkum - நிரவயவஸ்ரூபனாயிருக்குமவனாய்,
வளர் ஒளி ஈசனை,Valar oli eesanai - வளர்கின்ற வொளியையுடைய ஸ்வாமியாய்
மூர்த்தியை,Moorthiyai - விலக்ஷண விக்ரஹயுக்தனாய்
பூதங்கள் ஐந்தை,Boothangal aindhai - பஞ்சபூத நிர்வாஹகனாய்
கிளர் ஒளி மாயனை,Kilar oli maayanai - ஒளி பொருந்தி மேன்மேலுங் கிளர்கின்ற ஆச்சர்ய சேஷ்டைகளை யுடையனான
கண்ணனை,Kannanai - கண்ணபிரானை
தாள் பற்றி,Thaal patri - திருவடிதொழப்பெற்றதனால்
யான் என்றும் கேடு இலன்,Yaan endrum kedu ilan - யான் ஒருநாளும் கேடு உடையேனல்லேன்.
3006திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (நித்யாஸித்த கல்யாண்குண பூஷிதனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கட்கு உபயவிபூதி ஸாம்ராஜ்யமும் குறையற உண்டாம்படி எம்பெருமான் அநுக்ரஹம் செய்தருள்வன் என்றாறாயிற்று.) 11
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11
கேடு இல்,Kedu il - ஒருநாளுமழில்லாத
விழு புகழ்,Vizhu pugazh - சிறந்த புகழையுடையனான
கேசவனை,Kesavanai - எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayirathul - ஓராயிரம் பாசுரங்களினுள்ளே
இவையும் ஒரு பத்தும்,Ivaiyum oru paththum - இப்பதிகத்தை
பயிற்றவல்லார்கட்கு,Payittravallaarkadku - ஓதவல்லவர்களுக்கு
அவன்,Avan - அந்த எம்பெருமான்
நாடும் நகரமும்,Naadum nagaramum - சிறியார் பெரியாரென்கிறவாசியின்றிக்கே அனைவரும்
நன்குடன் காண,Nankudan kaana - நன்றாகக் காணும்படி
நலன் இடை ஊர்தி பண்ணி,Nalan idai oorthi panni - பகவத் பாகவத் விஷயத்தில் அடிமைச் செல்வத்தோடே நடக்கும்படி பண்ணி
வீடும் பெறுக்கி,Veedum perukki - மோக்ஷானந்தத்தையும் அடைவித்து
தன் மூவுலக்கும்,Than moovulakkum - தன்னுடையதான மூவுலகங்கட்கும்
ஒரு நாயகம்,Oru naayagam - ஏகாதிபதியாயிருக்கும் சிறப்பையும்
தரும்,Tharum - தந்தருள்வன்