| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 504 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 1 | தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா உய்யுமாம் கொலோ வென்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே | அனங்க தேவா, Ananga Deva - காம தேவனே! தைஒரு திங்களும், Thai Oru Thingalum - தை மாதம் முழுதும் தரை விளக்கி, Tharai Vilakki - நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக தண் மண்டலம் இட்டு, Than Mandalam ittu - குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு மாசிமுன் நாள், Maasi Mun Naal - மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில் ஐய நுண்மணல் கொண்டு, Aiya Nunnmanal Kondu - அழகிய சிறிய மணல்களினால் தெரு, Theru - (நீ எழுந்தருளும்) வீதிகளை அழகினுக்கு அணிந்து அலங்கரித்து, Azhaginukku Anindhu Alankaridhu - அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி, Uyyavum Aam Kolo Endru Solli - (காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி உன்னையும், Unnaiyum - (காமனாகிய) உன்னையும் உம்பியையும், Umbiyaiyum - உன் தம்பியான சாமனையும் தொழுதேன், Thozhuthen - வணங்கா நின்றேன் வெய்யது, Veiyadhu - (ப்ரதி கூலர் பக்கலில்) உக்கிரமானதும் தழல் உமிழ், Thazhal Umizh - நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான ஓர் சக்கரம், Or Chakkaram - ஒப்பற்ற திரு வழி யாழ்வானை கை, Kai - திருக் கையில் அணிந்துள்ள வேங்கடவற்கு, Vengadavarku - திருவேங்கடமுடையானுக்கு என்னை, Ennai - என்னை விதிக்கிற்றி, Vithikkiri - கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும் |
| 505 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 2 | வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே | காமதேவா, Kaama Deva - மன்மத தேவனே! வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு முள்ளும் இல்லா சுள்ளி, Mullum Illa Sulli - (எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை எரி மடுத்து, Eri Maduthu - நெருப்பிலிட்டு முயன்று, Muyandru - (இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து உன்னை நோற்கின்றேன், Unnai Norkindren - நோன்பு நோற்கா நின்றேன் (ஆன பின்பு) கள் அவிழ், Kal Avizh - தேன் பெருகா நின்றுள்ள பூ புஷ்பங்களாகிற கணை, Poo Pushpangalagira Kanai - அம்புகளை தெரு அணிந்து, Theru Anindhu - வீதிகளை அலங்கரித்து, வெள் வரைப் பதன் முன்னம், Vel Varaipathan Munnam - கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே துறை படிந்து, Thurai Padindhu - நீர்த் துறைகறில் முழுகி, தொடுத்துக் கொண்டு, Toduthu Kondu - (வில்லில்) தொடுத்துக் கொண்டு கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி, Kadal Vannan Enbathu Or Per Yezhudhi - கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை (அம்பிலே) எழுதிக் கொண்டு புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில், Pullinai Vai Pilandhan Enbathu Or Ilakkinil - பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன், என்னும் ஓர் குறியாகிற அக்கடல்வண்ணன் பக்கலில் புக, Puga - (நான்) சென்று சேரும்படி என்னை என்னை, Ennai - என்னை எய்கிற்றி, Eykitri - (நீ) சேர்ப்பிக்கவேணும். |
| 506 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 3 | மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே | நல்நறு மத்த மலர், Nalnaru Matha Malar - நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும் முருக்கமலர்கொண்டு, Murukka Malar Kondu - முருக்க மலர்களையுங் கொண்டு முப்போதும், Muppothum - மூன்று காலங்களிலும் உன் அடி வணங்கி, Un Adi Vanangi - உன் அடியை வணங்கி தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான்தெய்வம், என்று, Thathuvam ili Endru Nenju Erindhu Vasakathu Azhithu Unnai Vaithidame 'Ivan Poiyan Theivam', Endru - இவன் பொய்யான்தெய்வம், என்று சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு, Kothu Alar poo kanai Thoduthu Kondu - கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி, Govindhan Enbathu Or Per Ezhuthi - கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக, Vithagan Vengadam Vaanan Enum Vilakinil Puga - அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே என்னை விதிக்கிற்றி, Ennai Vithikitri - என்னை நீ செய்ய வேணும். |
| 507 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 4 | சுவரில் புராண நின் பேர் எழுதிச் சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும் கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே | புராண, Purana - நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே! காம தேவா, Kama Deva - மன்மதனே! சுவரில், Suvaril - சுவரிலே நின் பேர், Nin Per - உனது பெயர்களை எழுதி, Ezhuthi - எழுதி சுறவம் நல் கொடிகளும், Suravam Nal Kodigalum - மீன்களாகிற நல்ல த்வஜங்களையும் துரங்கங்களும், Thurangangalum - குதிரைகளையும் கவரி பிணாக்களும், Kavari Pinaakkalum - சாமரம் வீசுகின்ற பெண்களையும் கரும்பு வில்லும், Karumbu Villum - கரும்பாகிற தநுஸ்ஸையும் காட்டித் தந்தேன் கண்டாய், Kaati Thandhen Kandai - உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன் அவரைப் பிராயம் தொடங்கி, Avarai Pirayam Thodangi - இளம் பருவமே தொடங்கி என்றும் ஆதரித்து, Endrum Aatharithu - (அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி எழுந்த, Ezhundhu - கிளர்ந்த என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளை துவரைப் பிரானுக்கே, Thuvarai Piranukke - த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே சங்கற்பித்து, Sangarpithu - (அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து தொழுது வைத்தேன், Thozhudhu Vaithen - (உன்னை) தண்டனிடா நின்றேன் ஒல்லை விதிக்கிற்றி, Ollai Vithikkiri - (இந்த மநோரதத்தை) (நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும். |
| 508 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 5 | வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தடமுலைகள் மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே | கண்டாய் மன்மதனே!, Kandai Manmadhane! - மன்மதனே! வானிடை, Vaanidai - ஸ்வர்க்க லோகத்தில் வாழும், Vaazhum - வாழுகின்ற அவ் வானவர்க்கு, Av Vaanavarkku - விலக்ஷணரான தேவர்களுக்கென்று மறையவர், Maraiyavar - ப்ராஹ்மணர் வேள்வியில், Velviyil - யாகத்தில் வகுத்த அலி, Vagutha Ali - கொடுத்த ஹவிஸ்ஸை கானிடை திரிவது ஓர் நரி புகுந்து, Kaanidai Thirivadhu Or Nari Pugundhu - காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளானவை மானிடவர்க்கு என்று பேச்சு படில், Maanidavarkku Endru Pechu Padil - (அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை) கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப, Kadappadhum Moppathum Seivadhu Oppa - கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல ஊனிடை, Oonidai - (தனது) திருமேனியில் ஆழி சங்கு, Aazhi Sangu - திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள) உத்தமற்கு என்று, Uthamarku Endru - புருஷோத்தமனுக்காக உன்னித்து எழுந்த, Unnithu Ezhundha - ஆதரவுடன் கிளர்ந்த யவை என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால் வாழகில்லேன், Vaazhakillen - உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் |
| 509 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 6 | உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல் தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் | காமதேவா, Kaama dheva - மன்மதனே! உரு உடையார், Uru Udayaar - அழகிய வடிவையுடையராயும் இளையார்கள், Ilaiyaarkal - யௌவன பருவமுடையராயும் நல்லார், Nallaar - காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும் பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில் திருந்தவே நோற்கின்றேன், Thirundhave Norkindren - நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’ கரு உடை முகில் வண்ணன், Karu Udai Mugil Vannan - (நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும் காயா வண்ணன், Kaayaa Vannan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும் ஒத்து வல்லார்களை கொண்டு, Othu Vallargalai Kondu - காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு வைகல், Vaigal - நாள்தோறும் தெருவிடை, Theruvidai - நீ வரும் வழியிலே எதிர் கொண்டு, Edhir Kondu - எதிரே சென்று கருவிளை போல் வண்ணன், Karuvilai Pol Vannan - காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான் கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால், Kamalam Vannam Thiru Udai Mugathinil Thiru Kankalal - செந்தாமரை மலரின் நிறம் போன்ற காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால் எனக்கு, Enakku - என் விஷயத்தில் திருந்தவே நோக்க, Thirundhave Nokka - விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி அருள், Arul - நீ கிருபை பண்ண வேணும். |
| 510 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 7 | காயுடை நெல்லொடு கரும்பமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வணங்குகின்றேன் தேசமுன் அளந்தவன் திரிவிக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே | மன்மதனே, Manmadhane - மன்மதனே! காய் உடை நெல்லோடு, Kaai Udai Nellodu - பசுங்காய் நெல்லும் கரும்பு, Karumbu - கரும்பும் அமைத்து, Amaithu - சமைத்து கட்டி, Katti - (அதனோடு கூட) கருப்புக் கட்டியும் அரிசி, Arisi - பச்சரிசியும் அவல், Aval - அவலும் அமைத்து, Amaithu - (ஆகிய இவற்றையும்) சமைத்து அளந்தவன், Alanthavan - (திருவடிகளால்) அளந்தருளினவனும் திருவிக்கிரமன், Thiruvikkiraman - திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான் என்னை, Ennai - என்னுடைய சாய் உடை, Saai Udai - ஒளியை யுடைய வயிறும், Vayirum - வயிற்றையும் மென் தடம் முலையும், Men Thadam Mulaiyum - மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும் வாய் உடை, Vaai Udai - நல்ல ஸ்வரத்தையுடையராயும் மறையவர், Maraiyavar - காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய மந்திரத்தால், Manthirathal - மந்திரத்தினால் உன்னை வணங்குகின்றேன், Unnai Vananguginren - உன்னை வணங்குகின்றேன் முன், Mun - மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில் தேசம், Desam - ஸகல லோகங்களையும் திருக் கைகளால், Thirukkaigalal - (தனது) திருக்கையினால் தீண்டும் வண்ணம், Theendum Vanam - ஸ்பர்சிக்கும்படி பண்ணி தரணியில், Tharanaiyil - (இப்) பூமண்டலத்தில்- தலைப் புகழ், Thalai Pugazh - நிலை நின்ற கீர்த்தியை தர கிற்றி, Thara Kitri - (நான்பெறும்படி) தந்தருள வேணும். |
| 511 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 8 | மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் | தேச உடை, Desa Udai - (பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும் திறல் உடை, Thiral Udai - மிடுக்கை யுடையவனும் எம்பெருமான், Emperuman - எமக்கு ஸ்வாமியுமான காமதேவா, Kamadeva - மன்மதனே! மாசு உடை, Maasu Udai - அழுக்குப் படிந்த உடம்பொடு, Udampodu - உடம்போடே கூட தலை, Thalai - தலை மயிரை உலறி, Ulari - விரித்துக் கொண்டு வாய்ப் புறம் வெளுத்து, Vaai Puram Veluthu - (தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று ஒரு போது உண்டு, Oru Podhu Undu - ஒரு வேளை புஜித்து நோற்கின்ற நோன்பினை, Norkindra Nonbinai - (இப்படிப்பட்ட வருத்தத்துடன்) (நான்) நோற்கின்ற நோன்பை குறிக்கொள், Kurikkol - (நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’ இங்கு, Ingu - இப்போது பேசுவது ஒன்று உண்டு, Pesuvadhu Ondru Undu - சொல்ல வேண்டுவது ஒன்று உளது (அதைச் சொல்லுகிறேன் கேள்) பெண்மையை, Penmaiyaai - (என்னுடைய) ஸத்தையை தலை யுடையத் தாக்கும் வண்ணம், Thalai Udaiya Thaakkum Vannam - ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும், Kesavan Nambiyai Kaal Pidippaal Ennum - கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற இப் பேறு, Ipperu - இப் புருஷார்த்தத்தை எனக்கு அருள், Enakku Arul - எனக்கு அருளவேணும். |
| 512 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 9 | தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய் உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே | முப்போதும், Muppothum - இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும் தொழுது வணங்கி, Thozhudhu Vanangi - ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து உன் அடி, Un Adi - உன் பாதங்களில் தூ மலர் தூய், Thoo Malar Thooi - பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி தொழுது, Thozhudhu - ஸேவித்து ஏத்துகின்றேன் நான், Ethukindren Naan - ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான் பார் கடல் வண்ணனுக்கே, Paar Kadal Vannanukke - பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே பழுது இன்றி, Pazhudhu Indri - குற்றமொன்றுமில்லாமல் பணி செய்து, Pani Seidhu - கைங்கரியம் பண்ணி வாழப் பெறா விடில், Vaazha Peraa Vidil - உஜ்ஜீவியா தொழிவேனாகில் அழுது அழுது, Azhudhu Azhudhu - (பின்பு நான்) பல காலும் அழுது அலமந்து, Alamandhu - தடுமாறி அம்மா வழங்க, Amma Vazhanga - ‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய வழங்க, Vazhanga - சஞ்சரித்து அது, Athu - அப்படி என்னைத் துடிக்க விடுவது ஆற்றவும், Aatravum - மிகவும் உனக்கு உறைக்கும், Unakku Uraikum - உன் தலை மேல் ஏறும் (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது உழுவது ஓர் எருத்தினை, Uzhuvathu Oar Yeruthinai - ஏருழுகின்ற ஒரு எருதை நுகம் கொடு பாய்ந்து, Nugam Kodu Paaindhu - நுகத் தடியால் தள்ளி ஊட்டம் இன்றி, Oottam Indri - தீனி யில்லாமல் துரந்தால் ஒக்கும், Thurandhaal Okkum - ஒட்டி விடுவதைப் போலாம் |
| 513 | நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 10 | கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே | கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை, Karumbu Vil Malarkanai Kaaman Velai - கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய கழல் இணை பணிந்து, Kazhal Inai Panindhu - இரண்டு பாதங்களையும் வணங்கி அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த, Angu Or Kari Alara Maruppinai Oshithu Pulvaai Pilandha - கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும், பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று, Manivannarku ennai Vakuthidu Endru - நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று பொருப்பு அன்ன, Poruppu Anna - மலை போன்ற மாடம், Maadam - மாடங்கள் பொலிந்து தோன்றும், Polindhu Thondrum - மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற புதுவையர் , Pudhuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு கோன், Kon - ஸ்வாமியான விட்டு சித்தன், Vittu Sithan - பெரியாழ்வாருடைய (மகளாகிற) கோதை, Kodhai - ஆண்டாள் (அருளிச் செய்த) விருப்புடை, Viruppudai - விருப்பமடியாகப் பிறந்த இன் தமிழ் மாலை, In Tamizh Maalai - இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை வல்லார், Vallar - ஓத வல்லவர்கள் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை நண்ணுவர், Nannuvar - கிட்டப் பெறுவர் |