| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2930 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்குக் காரணமான பஞ்சமஹாபூதங்களையும்-, அந்த பூதங்களினால் இயன்ற பொருள்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு விலக்ஷணமான குணங்களோடு ஆழ்வார்க்கு ஸேவை தந்தருளியதனால், அத்தகைய நிலைமையை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை இப்படிப்பட்ட தன்மையுடையவனென்று கூறுதற்கு இயலாமல் திகைத்து நிற்கின்றார். “கண்ணனைக் கூவுமாறே” என்ற முடிக்குஞ்சொல் இன்றி விட்டிருக்கிறார்; அதனை வருவித்து உரைத்துக்கொள்க.) 1 | புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ! திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ! நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ! இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே. -3-4-1 | கண்ணனை,Kannanai - (உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை புகழும்,Pugazhum - (வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற நல்,Nal - விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய ஒருவன்,Oruvan - ஒப்பற்றவன் என்கோ,Enko - என்று சொல்வேனோ? பொருவு இல் சீர்,Poruvu il seer - ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய பூமி என்கோ,Bhoomi enko - பூமியென்று சொல்வேனோ? திகழும்,Thigazhum - விளங்குகிற பரவை என்கோ,Paravai enko - நீர்நிலையென்று சொல்வேனோ? தீ என்கோ,Thee enko - அக்கினியென்பேனோ? வாயு என்கோ,Vayu enko - காற்று என்பேனோ? நிகழும் ஆகாசம் என்கோ,Nigazhum aagaasam enko - எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ? நீள்சுடர் இரண்டும் என்கோ,Neel sudar irandum enko - (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ? இகழ்வு இல்,Igazvu il - இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய) இவ் இனைத்தும் என்கோ,Iv inaitthum enko - இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ? கூவும் ஆறு ஏ,Koovum aaru ae - (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.) |
| 2931 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (கீழ்ப் பாசுரத்திற் கூறிய பஞ்ச பூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார்.) 2 | கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ! மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ! நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ! பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2 | பாவுசீர் கண்ணன்,Paavuseer Kannan - பரம்பின திருக் கல்யாண குணங்களை யுடைய க்ருஷ்ணனென்ற திருநாமமுடையவனும் பங்கயக் கண்ணன்,Pangaya Kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனும் எம்மானை,Emmaanai - எமது தலைவனுமாகிய எம்பெருமானை குன்றங்கள் அனைத்தும் என்கோ,Kunrangkal anaiththum enko - எல்லாமும் என்று சொல்வேனோ? மெவு சீர் மாரி என்கோ,Mevu seer maari enko - (கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ? விளங்கு தாரகைகள் என்கோ,Vilangum thaarakaigal enko - பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ? நா இயல் கலைகள் என்கோ,Naa iyal kalaigal enko - நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ? ஞானம் நல் ஆவி என்கோ,Gnaanam nal aavi enko - அர்த்த ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ? கூவும் ஆறு,Koovum aaru - (எம்பெருமானைச்) சொல்லும் விதத்தை அறியமாட்டேன்,Ariya maatten - அறிகின்றேனில்லை |
| 2932 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) ( எம்பெருமான் ப்ரபஞ்ச சரீரகனாயிருக்கும்படியை முதலிரண்டு பாசுரங்களிற் கூறிய ஆழ்வார், இந்தப் பாசரத்தில் தனக்கு உரிய திருமேனியோடு ஸேவை ஸாதிக்கின்ற அப்பெருமானை அநுபவிக்கிறார். இவ்வாறு அநுபவித்துக் கூறியதற்குக் காரணம் – எம்பெருமான் ஜகத்தை சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையும் தனக்கு உரிய திருமேனியைக் கைக்கொண்டு நிற்கும் நிலையும், ஆக இவ் விரண்டும் ஆழ்வார்க்கு ஒத்திருக்கையாலென்க.) 3 | பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ! அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ! செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ! சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3 | சாதி மாணிக்கத்தை,Saadhi maanikaththai - நல்ல ஜாதியான (ஆகரத்தில் தோன்றிய) கருமாணிக்கம் போல விளங்குனின்ற திருமேனியையுடைய திருமாலை பங்கயக் கண்ணன் என்கோ,Pangayak Kannan enko - செந்தாமரைக் கண்ணனென்பேனோ? பவளச் செவ்வாயன் என் கோ,Pavala sevvayan enko - பவளம்போல சிவந்த வாயை யுடையவன் என்பேனோ? அம் கதிர் அடியன் என்கோ,Am kathir adiyan enko - அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளை யுடையவனென்பேனோ? அஞ்சனம் வண்ணன் என்கோ,Anjanam vannan enko - மைபோலுங் கருநிறத்தை யுடையவனெனபோனோ? செம் கதிர் முடியன் என்கோ,Sem kathir mudiyan enko - சிவந்த ஒளியையுடைய கிரீடத்தையுடையவனென்பேனோ? திரு மறு மார்வன் என்கோ,Thiru maru maarvan enko - பிராட்டியையும் ஸ்ரீவத்ஸமென்னும் மறுவையுமுடைய திருமார்பையுடைய வனென்பேனோ? சங்கு சக்கரத்தன் என்கோ,Sangu sakkarathan enko - சங்குசக்கரங்களை யுடையவனென்பேனோ? |
| 2933 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (*யத் யத் விபூதி மத்..* (உலகத்திலே சிறந்து தோன்றும் பொருள்கள் யாவும் எனது தேஜஸ்ஸின் அம்சத்தினாலுண்டானவை) என்று கீதையில் கண்ணபிரான் பாராட்டிக் கூறியித்தலால் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக்கிருக்குமென்பது கருதி ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் எம்பெருமானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி யநுபவிக்கின்றனரென்க. ஆதியஞ்சோதி யென்பது முதல் எம்பெருமானை நேரே சொல்லுகின்றது.) 4 | சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ! சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ! ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ! ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4 | ஆதும் இல் காலத்து,Aadhum il kaalaththu - (என்னிடத்து) யாதொரு உபாயமுமில்லாத காலத்திலே எந்தை,Endhai - என் தந்தையைப்போலப் பாதுகாக்க ஒருப்பட்டவனும் அச்சுதன்,Achuthan - (பின்பு ஒருகாலும் என்னை அந்த நிலையினின்று) நழுவ விடாதவனும் அமலனை,Amalanai - (அங்ஙனம் பாதகாத்தலைத்) தன் பேறாகக் கொள்பவனுமான எம்பெருமானை சாதி மாணிக்கம் என்கோ,Saadhi maanikam enko - மாணிக்கம் – நவமணிகளுள் ஒன்று. (நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.) சாதி மாணிக்கம் என்றது சிறந்த ஆகரத்திற் பிறந்ததும் குற்றமற்றதும் இயற்கையழகையுடையதும் பெருவிலையதுமான மாணிக்கம் என்றபடி. சவிகொள் பொன் என்கோ,Savikol pon enko - ஒளியையுடைய பொன் என்பேனோ? சவிகொள் முத்தம் என்கோ,Savikol muththam enko - நீரோட்டமுள்ள முத்து என்பேனோ? சாதிநல்வயிரம் என்கோ,Saadhi nal vayiram enko - சாதியில் தோன்றிய சிறந்த வஜ்ரரத்னமென்பேனோ? தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,Thavivu il seer vilakkam enko - அழிதலில்லாத ஒளியையுடைய விளக்கு என்பேனோ? ஆதி,Aadhi - எல்லாப் பொருள்கட்கும் முந்தியிருப்பதாய் அம்,Am - அழகியதான சோதி என்கோ,Sothi enko - தேஜோமயமான திருமேனியையுடையவனென்பேனோ? ஆதி,Aadhi - தலைவனாகிய அம்,Am - (ஆனந்தம் முதலிய குணங்களால்) இனியவனான புருடன் என்கோ,Purudan enko - பரமபுருஷன் என்பேனோ? |
| 2934 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது) 5 | அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ! நலம்கடல் அமுதம் என்கோ! அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ! நெய்ச்சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5 | அச்சுதன்,Achuthan - (எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ? அமலன் என்கோ,Amalan enko - அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ? அடியவர்,Adiyavar - தன்னடியார்களது வினை,Vinai - புண்ணியபாபமென்கிற இருவினைகளையும் கெடுக்கும்,Kedukkum - போக்குவதும் அ சுவை கட்டி என்கோ,A suvai katti enko - அந்த அமிருதத்தின் உருசியையுடைய கருப்புக் கட்டி யென்போனோ? அறு சுவை அடிசில் என்கோ,Aru suvai adisil enko - அறுவகைச் சுவையும் நிரம்பிய உணவு என்பேனோ? நச்சு,Nachchu - (இனிமைபற்றி) விரும்பப்படுவதுமான மா மருந்தம் என்கோ,Maa marundham enko - சிறந்த ஔஷதமென்பேனோ நலம் கடல் அமுதம் என்கோ,Nalam kadal amudham enko - நல்ல பாற்கடலில் தோன்றிய அம்ருதமென்பேனோ? நெய் சுவை தேறல் என்கோ,Nei suvai therhal enko - நெய்போலுஞ் சுவையையுடைய தேன் என்பேனோ? கனி என்கோ,Kani enko - பழமென்பேனோ? பால் என்கோனோ,Paal enkonoo - பால் என்பேனோ? |
| 2935 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (வேதம் முதலியனவான இயலும் இசையுமாயுள்ள சப்த ராசிகளை எம்பெருமான் தனக்கு விசேஷணமாகப் பெற்றிருக்கின்றபடியைக் கூறுகின்றாரிப்பாட்டில்) 6 | பால் என்கோ! நான்கு வேதப் பயன் என்கோ! சமய நீதி நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ! மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6 | வானவர் ஆதியை,Vaanavar aadhiyai - தேவாதி தேவனான எம்பெருமானை பால் என்கோ,Paal enko - பால் என்பேனோ? பயன் நான்கு வேதம் என்கோ,Payan naangu vedham enko - (பிரமாணங்களுக்குள்) சிறந்ததான நால்வேதங்களென்பேனோ? சமயம்,Samayam - வைதிக மதத்தைத் தெரிவிக்கின்ற நீதி,Needhi - முறைமையையுடைய நூல் என்கோ,Nool enko - (இதிஹாஸ புராணங்களாகிற) சாஸ்திரங்கள் என்பேனோ? நுடங்கு,Nudangu - (கேட்டவர்களை) ஈடுபடுத்துகின்ற கேள்வி,Kelvi - (செவியிற்) கேட்டலையுடைய இசை என்கோ,Isai enko - ஸங்கீதமென்பேனோ? இவற்றுள்,Ivatrul - கீழ்ச்சொன்ன வேதம் முதலிய எல்லாவற்றினும் நல்ல,Nalla - சிறந்த மேல் என்கோ,Mel enko - மேன்மையுடையது என்பேனோ? வினையின்,Vinaiyin - (செய்கின்ற) முயற்சியைக் காட்டிலும் மிக்க,Mikka - மிகப்பலமடங்கு மேம்பட்டு விளைகின்ற பயன் என்கோ,Payan enko - பலன் என்பேனோ? கண்ணன் என்கோ,Kannan enko - (உனக்கு நான் இருக்கிறேன் நீ அஞ்சவேண்டா என்று சரமச்லோகத்தினால் அபயமளித்த) ஸ்ரீகிருஷ்ணன் என்பேனோ? மால் என்கோ,Maal enko - அடியவர் திறந்து வியாமோஹமுடையவனென்பேனோ? மாயன் என்கோ,Maayan enko - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனென்பேனோ? |
| 2936 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களை யுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்) 7 | வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ! வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ! ஊனம்இல் செல்வம் என்கோ! ஊனம்இல் சுவர்க்கம் என்கோ! ஊனம்இல் மோக்கம் என்கோ ஒளிமணி வண்ண னையே!–3-4-7 | ஒளி மணி வண்ணனை,Oli mani vannanai - பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை வானவர் ஆதி என்கோ,Vaanavar aadhi enko - நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ? வானவர் தெய்வமென்கோ?,Vaanavar Deivam enko - அந்த நித்தியஸூரிகளால் கதியென்று பற்றப்படும் தெய்வமென்பேனோ? வானவர் போகம் என்கோ,Vaanavar pogam enko - அந்த நித்யஸ்ரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ? வானவர்,Vaanavar - அந்த வானவர்கட்கு முற்றும் என்கோ,Muttrum enko - (இதுவரையிற் கூறப் படாத) எல்லாமும் என்பேனோ? ஊனம் இல்,Oonam il - என்றும் அழிதல் இல்லாத செல்வம் என்கோ,Selvam enko - செல்வமென்பேனோ? ஊனம் இல் ஸ்வர்க்கம் என்கோ?,Oonam il swarggam enko - ஒருநாளும் நசிக்காத ஸுவர்க்க போகமென்போனோ? ஊனம் இல் மோக்கம் என்கோ?,Oonam il mokkam enko - விலஷணமான மோக்ஷம் என்பேனோ? |
| 2937 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.) 8 | ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ! அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–3-4-8 | அளி மகிழ்ந்து,Ali magizhndhu - உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி உலகம் எல்லாம்,Ulagam ellaam - எல்லா உலகங்களையும் படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து அவை,Avai - அவ்வுலகங்களெல்லாம் ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும் களி மலர் துன்வன்,Kaliyumalar thunvan - தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும் எம்மான்,Emmaan - எமக்குத் தலைவனும் மாயனை,Maayanai - மாயங்களையுடையவனுமாகிய கண்ணனை,Kannanai - கண்ணபிரானை ஒளி மணிவண்ணன் என்கோ,Oli mani vannan enko - ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ? ஒருவன் என்று,Oruvan endru - ஒப்பற்ற கடவுள் என்று ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற நளிர்மதி சடையன் என்கோ,Nalirmathi sadaiyan enko - குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ? நான்முகன் கடவுள் என்கோ,Naanmugan kadavul enko - பிரமதேவனெப்பேனோ? |
| 2938 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமானுடைய விபூதிகளைத் தனித்தனியே சொல்லிமுடித்தல் முடியாத காரியம்; சுருக்கமாகச் சொல்லில், சேதநப் பொருள்களும் அசேதநப் பொருள்களுமாகிய எல்லாமும் அவனுடைய விபூதிகளேயாம்- என்கிறது இப்பாசுரம்.) 9 | கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல் நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9 | கண்ணனை,Kannanai - (அடியார்க்கு எளியனான) க்ருஷ்ணனாகத் திருவவதரித்தவனும் மாயன் தன்னை,Maayan thannai - ஆச்சரியமான குணஞ்செயல்களையுடையவனும் கடல் கடைந்து,Kadal kadainthu - பாற்கலைக் கடைந்து அமுதம் கொண்ட,Amudham konda - அமிருதத்தையெடுத்து (தேவர்கட்குக்) கொடுத்த அண்ணலை,Annalai - பெருமையையுடையவனும் அச்சுதனை,Achuthanai - (தன்னையடைந்தவரை) ஒருபோதும் நழுவவிடாதவனும் அனந்தனை,Anandhanai - அளவிடமுடியாத ஸ்வரூப ரூபகுண விபூதிகளையுடையவனும் அனந்தன் தன் மேல்,Anandhan than mel - திருவனந்தாழ்வான் மீது நண்ணி,Nanni - பொருந்தி நன்கு உறைகின்றானை,Nangu uraiginraanai - நன்றாகந் வண்வளர்ந்தருள்யவனும் ஞாலம்,Gnaalam - பிரபஞ்சத்வத உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) வயிற்றில் வைத்துப் பாதுகாத்து உமிழ்ந்த,Umizhndha - (அந்தப் பிரளயம் நீங்கியவுடனேயே) வெளிப்படுத்திய மாலை,Maalai - வாத்ஸ்ல்ய முடையவனுமான திருமாலை எண்ணும் ஆறு,Ennum aaru - (இத்தன்மைய னென்று) நினைத்துக் கூறும் வகையை அறியமாட்டேன்,Ariyamaaten - அறிகின்றேனில்லை யாவையும்,Yaavaiyum - எல்லாவகைப்பட்ட அசேதனப் பொருள்களும் யவரும்,Yavarum - எல்லாவகைப்பட்ட சேதனப் பொருள்களும் தானே,Thaane - அந்த எம்பெருமான் தானேயாவன் |
| 2939 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (உடலுக்கு உள்ளேயிருக்கிற உயிர்கட்கு அந்த உடலைச்சார்ந்த இளமை நரை திரை முதலிய வேறுபாடுகள் தட்டுவதில்லையென்ற எண்ணம் மனதிற்படுமாயின், எம்பெருமான் சேதநா சேதனங்களோடு கலந்திருந்தாலும் அவற்றின் சுகம் துக்கம் முதலிய நிலைமைகள் அவ்வெம்பெருமானுக்குத் தட்டாவென்பதும் நன்கு விளங்குமென்பது இப்பாசுரத்தின் தாற்பரியமாகும்.) 10 | யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10 | உணர்வின் மூர்த்தி,Unarvin moorthi - ஞானஸ்வரூபமாக இருக்கின்ற எம்பெருமான் பாவையும்,Paavaiyum - எல்லா அசேதனப்பொருள்களும் யவரும்,Yavarum - எல்லாச் சேதனர்களும் தான் ஆய்,Thaan aay - தாயேயாகியும் (சேதநாசேதநங்களில் அந்தராத்மாவாகத்தான் பிரவேசித்திருந்தும்) அவர் அவர் சமயம் தோறும்,Avar avar samayam thorum - அந்தந்தச் சேதனர்கட்கு உரியனவான (சுகம் துக்கம் முதலிய நிலைமைகளில்) தோய்வு இலன்,Thoivu ilan - (அவர்களைப் போலத் தனக்கு) யாதொரு கலப்பும் இல்லாதவன் புலன் ஐந்துக்கும் சொலப்படான்,Pulan aindukkum solapadaan - பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும் விஷயமாகச் சொல்லப்படாதவன்! (ஐம்புலன்களாலறியப்படாதவனென்றபடி.) (ஆன்மாக்களுக்கு உள்ளேயிருந்தும் அவைகளுடைய சுகதுக்கங்கள் எம்பெருமானைச்சேர மாட்டா என்றது எவ்வாறு பொருந்துமெனின்.) ஆவி சேர் உயிரின் உள்,Aavi ser uyirin ul - உடம்பைப் பொருந்திய ஆத்õமவினுடைய ஸ்வரூபத்தில் ஆதும்,Aadhum - (சரீரத்தைச் சார்ந்த இளமை முதலிய தன்மைகள்) எதிலும் ஓர் பற்று இலராத,Or patru ilaraadha - ஒரு ஸம்பந்தமும் இல்லையென்கிற பாவனை,Paavanai - எண்ணமானது அதனை கூடில்,Adhanai koodil - அந்த ஆத்மாவுக்குத் தகுமென்று தோன்றினால் அவனையும்,Avanaiyum - அந்த எம்பெருமானுக்கும் (சேதநர்களின் சுக துக்கங்கள் சிறிதும் சேரா என்கிற இதுவும்) கூடல் ஆம்,Koodal aam - தகும். |
| 2940 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (மஹாஜ்ஞாநவான்களான நித்யஸூரிகள் “இருள் தருமா ஞாலமான இந்தப் பிரபஞ்சத்திற பிறந்தும் நம்மைப்போன்ற நன் ஞானத்தைப் பெற்று எம்பெருமானை இவ்வாழ்வார் அநுபவிக்கினறரே!” என்று நம்மாழ்வாரிடத்துத் தாம் கொண்ட பேரன்பினால், ஆழ்வாரருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓதினவர்களிடத்திலும் ப்ரீதி கொண்டு ஸர்வேச்வரனையும் விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பர்களென்க.) 11 | கூடிவண்டு அறையும் தண்தார்க் கொண்டல்போல் வண்ணன் றன்னை மாடுஅலர் பொழில் குருகூர் வண்சட கோபன் சொன்ன பாடல்ஓர் ஆயி ரத்துள் இவையும்ஓர் பத்தும் வல்லார் வீடுஇல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11 | வண்டு,Vandu - வண்டுகள் கூடி,Koodi - மொய்த்து அறையும்,Araiyum - (மதுபானத்தினாலுண்டான களிப்பினால்) ரீங்காரஞ் செய்கின்ற தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை,Than tar kondal pol vannan thannai - காளமேகச்யாமளனைக் குறித்து மாடு,Madu - சுற்றுப்பக்கங்களில் அலர்,Alar - மலர்ந்த பொழில்,Pozhil - சோலைகளையுடைய குருகூர்,kurukoor - திருக்குருகூரிலவதரித்த வள்,Val - ஔதாரியத்தையுடைய சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார் சொன்ன,Sonna - பாடியருளிய பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayiratthul - ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள் இவை ஒருபத்தும்,Ivai orupathum - இந்தப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,Vallar - அறியவல்லார் வீடு இல போகம் எய்தி,Veedu ila pogam yeythi - இடைவிடுதலில்லாத (நிரந்தரமான) பகவதநுபவத்தைப் பெற்று அமரர்,Amarar - நித்யஸூரிகளால் மொய்த்து,Moythu - நெருங்கி விரும்புவர்,Virumpuvar - விரும்பப்படுவர். |