திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-3 சினவில் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1568பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் – ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை – மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் – நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் – என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4- என்கிறபடியே களிக்கப் பெற்றேன்) 1
சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1
பதவுரை Show / Hide
சினம் இல், Sinam Il - கோபத்துக்கு இருப்பிடமாய் (- (நறையூர் நின்ற நம்பியை-;))
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுடைரான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
உயிர் மாள, Uyir Maala - உயிரிழந்து முடியும்படியாக
செற்ற, Settra - சீறின
வீல்லி என்று, Veelli Endru - வில்லை யுடையவனே! என்று
கற்றவர், Kattravar - அறிவுடையவர்கள்
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
மனம் உள் கொண்டு, Manam Ula Kondu - நெஞ்சிலே தியானித்து
என்றும் எப்போதும், Endrum Eppodhum - எக்காலத்திலும் எல்லா நிலைமைகளிலும்
நி்ன்று, Ninru - நிலைநின்று
ஏத்தும், Aethum - தோத்திரம் பண்ணும்படியாகவுள்ளவனும்
மா முனியை, Maa Muniyai - (அடியார்திறத்தில் இன்னமும் என் செய்வோமென்று, நெடிய சிந்தனைகளைச் செய்பவனும்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
ஏழ் மரம் எய்த, Ezha Maram Eytha - ஸப்தஸால விருஷங்களை அம்பு எய்து துளைபடுத்தின
மைந்தனை, Mainthanai - மிடுக்குடையவனும்
நனவில் சென்றார்க்கும், Nanavil Senraarkkum - கண்மலரப் பெற்றவர்களான சிறந்த ஞானிகட்கும்
நண்ணற்கு அரியானை, Nannarku Ariyanai - கிட்டக் கூடாதவனுமான
அடியேன் நான், Adiyen Naan - அடியேனாகிய நான்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
இன்று கண்டேன், Indru Kandein - இன்று காணப்பெற்றேன்;
கண்டமையால், Kandamaiyala - காணப்பெற்றதனால்
என் கண் இணைகள், En Kan Inaihal - எனது இரண்டு கண்களும்
களிப்ப, Kalippa - ஸந்தோஷிக்க
களித்தேன், Kalitthen - நானும் ஸந்தோஷித்தேன்.
1569பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பூர்ணனாய் இருந்து வைத்து என் பக்கலில் அன்பைப் பண்ணினவனை – அவன் என்பக்களில் அன்பைப் பண்ணி மேல் விழா நிற்க நான் அவனை ஒழிய வேறு சிலரை ஆதரிப்பேனோ) 2
தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக் காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக் குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –7-3-2
பதவுரை Show / Hide
தாய் நினைந்த கன்றே ஒக்க, Thaai Ninaindha Kanre Okka - தன் தாயாகிய பசுவை நினைக்கும் கன்றுபோல
என்னையும், Ennaiyum - அடியேனையும்
தன்னையே நினைக்க செய்து, Thannaie Ninaikka Seidhu - (எம் பெருமானாகிய) தன்னையே சிந்திக்கும்படி பண்ணி (அதற்கு மேலே)
தான் எனக்கு ஆய் நினைந்து, Thaan Enakku Aay Ninaindhu - எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து
அருள் செய்யும் அப்பனை, Arul Seyyum Appanai - கிருபை பண்ணும் உபகாரகனும்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
இ வையகம், I Vaiyagam - இவ்வுலகத்தை யெல்லாம்
உண்டு, Undu - விழுங்கி (பின்பு)
உமிழ்ந்திட்ட, Umizhndhitta - வெளிப்புறப்பட விட்ட
வாயனை, Vayanai - திருப்பவளத்தை யுடையவனும்,
மகரம் குழை காதனை, Makarum Kuzhai Kaadhani - மகர கு்ணடலங்களைத் திருச்செவிகளில் அணிந்துள்ளவனும்
மைந்தனை, Mainthanai - நித்யயுவாவும்
மதிள் கோவல் இடை கழி ஆயனை, Mathil Koval Idai Kazhi Aayenai - திருமதில்களை யுடைய திருக்கோவலூரிடை கழியில் கோபாலனாய் நிற்பவனும்
அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளினிடையே
அரி ஏற்றை, Ari Aetrai - சிங்கம் போலவும் காளை போலவும் செருக்குத் தோற்ற விருப்பவனும்
என் அன்பனை அன்றி, En Anbanai Andri - என்னிடத்தில் அன்புடையவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து
ஆதரியேன், Aadharien - (வேறொருவனை) ஆதரிக்கமாட்டேன்.
1570பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில் சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி – எனக்கு ஜனகன் ஆனவனை-என்னுடைய குல நாதன் ஆனவனை – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எனக்கு பிரகாசிப்பித்த மகா உபாகாரகனை – எத்தால் மறக்கேனே –பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ நான் இட்ட பச்சையை நினைத்து ஆறி இருக்கவோ-எவ்வழியால் மறப்பது) 3
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச் சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன் கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3
பதவுரை Show / Hide
வந்த நாள் வந்து, Vandha Naal Vandhu - தானாகவே என்னை ஸ்வீகரிக்க எழுந்தருளின நாளிலே எழுந்தருளி
என் நெஞ்சு, En Nenju - எனது நெஞ்சை
இடம் கொண்டான், Idam Kondaaan - இருப்பிடமாகக் கொண்டான்;
மற்று ஓர் நெஞ்சு அறியான், Mattru Oor Nenju Ariyaan - வேறொருவருடைய நெஞ்சையும் தனக்கு இருப்பிடமாக நெஞ்சிலும் நினைக்கின்றிலன்;
அடியேனுடை, Adiyeenudai - அடியேனுடைய
சிந்தை ஆய் வந்து, Sindhai Aay Vandhu - மநோரதங்களைத் தானுடையனாய் வந்து
என்னை, Ennai - அடியேனை
தென்புலர்க்கு சேர் கொடான், Thenpularkku Seer Kodaan - யமபடர்கையில் காட்டிக்கொடாதே விஷயீ கரித்தருளினான்,
இது, Idhu - இதனை
சிக்கன, Sikkan - திடமாக
பெற்றேன், Pettren - லபித்தேன்; (ஆன பின்பு.)
கொந்து உலாம் பொழில் சூழ், Kondhu Ulaam Pozhil Soozh - பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளினால் சூழப்பட்ட
குடந்தைத் தலை, Kudandhaith Thalai - திருக்குடந்தையில் (எழுந்தருளியுள்ள)
கோவினை, Kovinai - ஸ்வாமியும்
குடம் ஆடிய கூத்தனை, Kudam Aadiya Kooththanai - குடக் கூத்தாடினவனும்
எந்தையை, Endhaiyai - எனக்குத் தந்தையும்
எந்தை தந்தை தம்மானை, Endhai Thandhai Thammaanai - என் முதுகுரவர்க்கும் ஸ்வாமியுமான
எம்பிரானை, Embiraanai - (திருநறையூர்) நம்பியை
எத்தால், Eththaal - எக்காரணம் பற்றி
மறக்கேன், Marakken - மறப்பேன் (மறக்கமுடியாது.)
1571பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது) 4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4
பதவுரை Show / Hide
உரங்களால் இயன்ற மன்னர் மாள, Urangalal Iyanra Mannar Maala - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
ஐவர்க்கு ஆய் சென்று, Aivarkku Aay Sendru - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி
இரங்கி, Irangi - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி
ஒரு தேர் ஊர்ந்து, Oru Ther Oornthu - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி
அவர்க்கு, Avarkku - அப்பாண்டவர்க்கு
இன் அருள் செய்யும் எம்பிரானை, In Arul Seyyum Empranai - பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும்
வம்பு ஆர் புனல் காவிரி, Vambu Aar Punal Kaviri - புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட
அரங்கம், Arangam - திருவரங்கம் பெரியகோயிலை
ஆளி, Aali - ஆள்பவனும்
என் ஆளி, En Aali - என்னையாள்பவனும்
விண் ஆளி, Vin Aali - பரமபதத்துக்குத்தலைவனும்,
ஆழி சூழ், Aazhi Soozh - கடல் சூழ்ந்த
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - வியாகுலமாகும்படி
சென்று, Sendru - அங்கெழுந்தருளி
சரங்கள் ஆண்ட, Sarangkal Aanda - அம்புகளை நடத்தின
தண் தாமரை கண்ணனுக்கு அன்றி, Than Thamarai Kannankku Andri - குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு)
என் மனம், En Manam - என் மனமானது
தாழ்ந்து நில்லாது, Thazhndhu Nilladhu - நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது.
1572பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமை பிறந்து-அது நேர் கொடு நேர் கிடையாமை களவு கண்டு புஜிக்கப் புக்கு-அது தன்னை முடியச் செய்து தலைக் கட்டாமை வாயது கையதாக அகப்பட்டு-உரலோடு சேர்த்து கட்டுண்டு-அடியுண்டு அடிக்கு இறாய்த்து உடம்பு வெளுத்து-பயர்த்து-பேகணித்து நின்ற நிலையை அனுசந்திக்க அனுசந்திக்க இவர்க்கு இவ்விருப்பு தானே யாய்த்து-சர்வ வித போக்யமுமாய் இருக்கிறது – சர்வ ரச-என்கிற படியே இனியதாக நின்றது –இப்படி சர்வ வித போக்யனாய் இருக்கிறவனை ஒழிய என் உடைய நெஞ்சு வேறு சிலரை அநவரத பாவனை பண்ணாது) 5
ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5
பதவுரை Show / Hide
ஆங்கு வெம் நரகத்து, Aangu Vem Narakaththu - அப்படிப்பட்ட கொடிய நரகங்களிலே
அழுந்தும் போது, Azhundhum Podhu - அழுந்தி நோவுபட நேர்ந்தகாலத்து
அங்கே வந்து, Angae Vandhu - அவ்விடங்களில் வந்து
அஞ்சேல் என்று, Anjael Endru - பயப்படவேண்டாவென்று
அடியேனை தாங்கு, Adiyenai Thaangu - அடியேனைப் பாகாத்தருள்கின்ற
தாமரை அன்ன பொன் ஆர் அடி, Thamarai Anna Pon Aar Adi - தாமரைபோன்று அழகு மிக்க திருவடிகளையுடையனும்
எம்பிரானை, Embiraanai - எமக்கு உபகாரகனும்
உம்பர்க்கு அணி ஆய் நின்ற, Umbarkku Ani Aay Nindra - மேலுலகங்கட்கெல்லாம் அலங்காரமாயிருக்கின்ற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் எழுந்தருளியிருக்கிற
அரியை, Ariyai - சிங்கம் போன்றவனும்
பரி கீறியை, Pari Keeriyai - குதிரையுருவாய் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும்
வெண்ணெய் உண்டு, Vennai Undu - வெண்ணெயை (க் களவாடி) அமுது செய்து
உரலினிடை, Uralinidai - உரலோடு கூட
ஆப்புண்ட, Aappund - கட்டுண்டிருந்தவனும்
தீம் கரும்பினை, Theem Karumbinai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனும்
தேனை, Thenai - தேன் போன்றவனும்
நன் பாலினை அன்றி, Nan Palinai Andri - இனிய பால்போன்றவனுமான திருநறையூர் நம்பியையல்லது (மற்றொருவரை)
என் மனம், En Manam - எனது நெஞ்சானது
சிந்தை செய்யாது, Sindhai Seyyaadhu - நினைக்கமாட்டாது,
1573பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதுக்கு முன்பு ஒதப் போகாதவன் அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை – இவ்வதாரத்துக்கு நாற்றங்காலாயக் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின நீர்மை உடையவனை அல்லது பாடல் செய்யேன்) 6
எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம் கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6
பதவுரை Show / Hide
எள் தனை பொழுது ஆகிலும், El Thanai Pozhuthu Aagilum - எள்ளத்தனை நொடிப் பொழுதுங் கூட (- (மற்றொருவரையும்))
என் மனத்து அகலாது, En Manathu Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாமல்
என்றும், Endrum - எக்காலத்திலும்
இருக்கும், Irukkum - என் மனக்தே யிருக்கையினாலாகிய
புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும்
தட்டு அலர்த்த, Thattu Alarttha - தட்டுப்போலே விகஸிப்பிக்கப்பட்ட
பொன் ஏய் அலர், Pon Aey Alar - பொன் போன்ற அலரை யுடைத்தான
கோங்கின், Kongin - கோங்குமரங்களினுடைய
தாழ் பொழில், Thazh Pozhil - தழைத்த தோப்புகளையுடைய
தருமாலிருஞ் சோலை, Tharumalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலெழுந் தருளியிருக்கிற
அம் கட்டியை, Am Kattiyai - மதுரமான கற்கண்டுபோல் போக்யனாயிருப்பவனும்,
கரும்பு ஈன்ற இன் சாற்றை, Karumbu Eendra In Sattrai - கரும்பில் நின்று முண்டான இனிய ரஸம்போன்றவனும்,
முன், Mun - முற்காலத்தில்
காதலால், Kaadhalal - அன்புடனே
மறை நான்கும், Marai Naankum - நால்வேதங்களையும்
ஓதிய, Othiya - (ஸாந்தீபிநி பக்கலில்) அத்யயனம் பண்ணின
பட்டனை, Pattanai - பண்டிதனும்
பரவை, Paravai - (திருப்பாற்) கடலில்
துயில், Thuyil - கண்வளர்ந்தருளினாநின்ற
ஏற்றை, Aetrai - பரமபுரஷனும்
என் பண்பனை அன்றி, En Panbanai Andri - எனக்கு எளியனுமான திருநறையூர் நம்பியைத்தவிர
பாடல் செய்யேன், Paadal Seyyen - பாடமாட்டேன்
1574பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயம் ஆனான் –பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை – இந்நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது) 7
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7
பதவுரை Show / Hide
பண்ணின், Pannin - இராகங்களுக்குள்ளே
இன், In - இனிமையான
மொழி, Mozhi - சொல்லையுடைய
யாழ், Yaazh - வீணையினுடைய
நரம்பில், Narambil - தந்திகளில்
பெற்ற, Petra - உண்டான
பாலை ஆகி, Paalai Aagi - பாலையென்கிற சிறந்த பண் போலே மிக இனியனாய்க் கொண்டு
இங்கே புகுந்து, Inge Pugundhu - என்னெஞ்சில் வந்து புகுந்து
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான், En Kannum Nenjum Vaayum Idam Kondaaan - எனது அவயவங்களைத் தனக்கு இருப்பிடமாக அங்கீகரித்தான்
கொண்டபின், Kondapin - அப்படி அங்கீகரித்தபின்பு,-
மறையோர், Maraiyore - வைதிகர்களினுடைய
மனம், Manam - மனத்தை
தன் உள், Than Ula - தனது வாஸஸ்தானமாகவுடையவனும்
விண்ணுளார் பெருமானை, Vinnulaar Perumaanai - நித்யஸூரிகளுக்குநாதனும்
எம்மானை, Emmaanai - எனக்கு ஸ்வாமியும்
வீங்கு நீர், Veengu Neer - நிரம்பிய நீரையுடையதாய்
மகரம் திளைக்கும், Makarath Thilaikkum - மீன்கள் துள்ளிவிளையாடா நி்ன்றுள்ளதான
கடல், Kadal - கடல் போன்ற
வண்ணன், Vannaan - திருநிறத்தையுடையவனும்
மா மணி வண்ணன், Maa Mani Vannaan - நீலமணி நிறத்தவனும்
எம் அண்ணல், Em Annal - எமக்கு நாதனமான திருநறையூர் நம்பியீனுடைய
வண்ணமே அன்றி, Vanname Andri - ஸ்வபாவத்தையே யல்லது (மற்றொன்றை)
என் வாய் உரையாது, En Vaai Uraiyaadhu - என் வாய் சொல்லமாட்டாது.
1575பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றும் இன்றிக்கே இருக்கிற என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை – நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை-அரை ஷணத்திலே பண்ணினவனை இன்று-நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன்) 8
இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும் முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8
பதவுரை Show / Hide
இம்மையே, Immaye - இஹலோகத்திலேயே (- (இன்று கண்டுகொண்டேன்-.))
அருள் பெற்றமையால், Arul Pettramaiyaal - எம்பெருமானுடைய திருவருளைப் பெற்றேனாதலால்
இனி, Ini - இனிமேல்
எமக்கு, Emakku - எம்மை
எப் பாவம், Ep Paavam - எவ்விதமான பாவம்
வந்து எய்தும், Vandu Eydhum - வந்து கிட்டக்கூடும்
சொல்வீர், Solveer - சொல்லுங்கள்;
அடும், Adum - ஆத்மஹாநியை விளைக்கிற
துனியை, Thuniyai - கருமங்களை
தீர்த்து, Theerthu - தவிர்த்து
இன்பமே, Inbame - நித்யாநந்தத்தையே
தருகின்றது, Tharugindrathu - தருகின்ற
ஓர் தோற்றம் தொல் நெறியை, Or Thotram Thol Neriyai - ஒப்பற்ற விலக்ஷணமாய் அநாதியான உபாயமாயிருப்பவனும்
வையம், Vaiyam - உலகத்தவர்களால்
தொழப்படும், Thozhapadum - ஆச்ரயிக்கப்படுகின்றவனும்
முனியை, Muniyai - (அவர்களுடைய நன்மைகளைச்) சிந்திப்பவனும்
வானவரால் வணங்கப்படும், Vaanavaral Vanangapadum - நித்யஸூரிகளால் வணங்கப்படுகின்ற
முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனை
பத்தர் தாம், Pathar Thaam - பக்தர்களால்
நுகர்கின்றது, Nugarkindrathu - உட்கொள்ளப்படுகின்ற
ஓர் கனியை, Or Kaniyai - ஒரு பழம்போன்றவனும்
காதல் செய்து, Kaadhal Seidhu - ஆசையுற்று
என் உள்ளம் கொண்ட, En Ullam Konda - என் நெஞ்சைக் கொள்ளை கொண்ட
கள்வனை, Kalvanai - கள்ளவனுமான பெருமானை
1576பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது – பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது – நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் – பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன் எத்தைச் செய்வேன் சொல்லி கோள்) 9
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9
பதவுரை Show / Hide
அடியேன், Adiyen - பரதந்திரனான நான்
இதற்கு என் செய்கேன், Idharku En Seigen - (அவன் பண்ணின மஹோபகாரமாகிய) இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்?
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்;
என்றும், Endrum - எக்காலமும்
என் மனத்தே, En Manatthae - என்னுள்ளத்திலேயே
இருக்கும், Irukkum - குடியிருப்பதனாலாகிய
புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும்
தஞ்சை ஆளியை, Thanjai Aaliyai - தஞ்சை மாமணிக்கோயிலை ஆள்பவனும்
அன்று, Andru - நரஸிம்ஹாவதாரததில்
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
நெஞ்சம், Nenjam - மார்பை
இடந்தவனை, Idanthavanai - பிளந்தொழித்தவனும்
தழலே புரை, Thazhale Purai - நெருப்புப் போன்றவனாய்
மின் செய், Min Sei - ஒளிவிடுகின்ற
வாள், Vaal - வாட்படையை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
நகர், Nagar - நகரமாகிய இலங்கை
பாழ்பட, Paalpada - பாழாகும்படி
சூழ், Sool - அந்நகரியைச் சூழ்ந்து கொண்டு அகழாயிருந்த
கடல், Kadal - கடலை
சிறை வைத்து, Sirai Vaiththu - அணைகட்டினவனும்
இமையோர் தொழும், Imaiyor Thozhum - தேவர்களால் ஆச்ரயிக்கப்படுமவனும்
பொன் செய் மால் வரையை, Pon Sei Maal Varaiyai - விரும்பத்தக்க பெரிய மலைபோன்றவனும்
மணி குன்றினை அன்றி, Mani Kunrinai Andri - நீலமணிமயமான பர்வதம் போன்றவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து (மற்றொருவனை நோக்கி)
என் மனம், En Manam - என் மனமானது
போற்றி என்னாது, Pothri Ennaadhu - மங்களாசாஸநம் பண்ணமாட்டாது.
1577பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம்) 10
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10
பதவுரை Show / Hide
தோடு, Thodu - இதழ்களானவை
விண்டு, Vindhu - விரிந்து
அலர், Alar - விகஸிக்கப்பெற்ற
பூ பொழில், Poo Pozhil - பூஞ்சோலைகளையுடைய
மங்கையர் தோன்றல், Mangaiyar Thondral - திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும்
திரு ஆலி நாடன், Thiru Aali Naadan - திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும்
வாள், Vaal - வாளை யுடையவருமான
கலியன் அவன், Kalyan Avan - அத் திருமங்கையாழ்வார்
நல் நறையூர் நின்ற நம்பி தன், Nal Naraiyur Nindra Nambi Than - திருநறையூர் நம்பியினுடைய
நல்ல மா மலர் சே அடி, Nalla Maa Malar Che Adi - அழகிய சிறந்த திருவடித்தாமரைகளை
சென்னியில் சூடியும், Chennaiyil Soodyum - (தமது) தலைமே லணிந்துகொண்டும்
தொழுதும், Thozhudum - வணங்கியும்
எழுந்து, Ezhundhu - எழுந்திருந்து
ஆடியும், Aadiyum - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடியும்
தொண்டர் கட்கு, Thondar Kadku - பாகவதர்களுக்கு (உஜ்ஜீவனமாக)
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சொல் மாலை, Sol Maalai - சொல் தொடையாகிய
இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
தொண்டீர், Thondir - எம்பெருமானடியார்களே!
பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்;
பாட, Paada - அங்ஙனம் ஓதவே
நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nilla - உங்களிடத்திற் பாவங்கள் நிற்கமாட்டா.