Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மண்ணை இருந்து துழாவி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3040திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குச நாயகியின் திருத்தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்களுக்கு அறிவியா நின்று கொண்டு ‘இப்படி யிவளை எம்பெருமான் பிச்சேற்றினானே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள்.) 1
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1
பெய் வளையீர்,Pei valaiyeer - கையில் வளையணிந்த மாதர்காள்!
மண்ணை இருந்து துழாவி,Mannai irundhu thuzhaavi - (என் மகளானவள்) பூமியைத் துழாவி
இது வாமனன் மண் என்னும்,Ithu vaamanan man ennum - இது (எம்பெருமான்) வாமனனாய் அளந்து கொண்ட மண்’ என்று கூறுகின்றாள்:
விண்ணை தொழுது,Vinnai thozhudhu - ஆகாசத்தை (நோக்கி) அஞ்சலி பண்ணி
அவன் மேவு வைகுந்தம் என்று,Avan mevva vaikuntham endru - ‘அவ்வெம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லி
கை காட்டும்,Kai kaattum - தன் கைகளாலே (பிறர்க்கும்) காட்டா நின்றாள்;
உள் நீர்,Ul neer - அகவாயில் கண்ணீரானது
கண்ணை மல்க நின்று,Kannai malga nindru - கண்ணையும் விஞ்சிப் புறப்படும்படி நின்று
கடல் வண்ணன் என்னும்,Kadal vannan ennum - கடல்போலும் நிறத்தையுடையவன் என்று சொல்லுகின்றாள்;
அன்னே- என் பெண்ணை பெரு மயல் செய்தார்க்கு -என் செய்தேன்,Anne - en pennai peru mayal seidharkku - en seidhen - அம்மே!என்னுடைய மகளை இப்படி அதிசயமான பிச்சேறும்படி பண்ணினவருக்கு -யாது செய்வேன்?
3041திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவை யுடையளாய் மான்போல் இளைய பருவத்தை யுடையளான இவள் செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன்.) 2
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2
பெய் வளை கைகளை,Pey valai kaigalai - (பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை
கூப்பி,Kooppi - குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து)
பிரான்,Piraan - உபகார சீலனான எம்பெருமான்
கிடக்கும்,Kidakkum - (எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற
கடல் என்னும்,Kadal ennum - கடல் (இது) என்று சொல்லுவது;
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி,Seyyadhor nyaayitrrai kaatti - சிவந்த ஒளியில் ஒப்பற்றவனான சூரியனைச் சுட்டிக் காட்டி
சிரிதரன் மூர்த்தி ஈது என்னும்,Sreedharan moorthi idhu ennum - ‘பெரிய பிராட்டியாரோடே கூடியுள்ள எம்பெருமானது வடிவு இது’ என்று சொல்லுவாள்;
கையும்,Kaiyum - (தான் அவனைக்கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே) வாடுவாள்;
கண் நீர் மலக நின்று,Kann neer malaga nindru - (அந்த வாட்டத்தினாலே) கண்ணீர் பெருக நின்று
நாரணன் என்னும்,Naaranan ennum - ‘நாரணன்’ என்று வாய்வெருவுவாள்,
அன்னே,Anne - அம்சே!
3042திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.) 3
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3
வினையுடை யாட்டியேன் பெற்ற,Vinaiyudai yaattiyen petra - கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்,Seri valai mun kai siru maan - நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும்,Ariyum - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி,Sem theeyai thazhuvi - சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும்,Achuthan ennum - ‘எம்பெருமான்’ என்கிறாள்;
மெய் வேவாள்,Mei vevaal - உடம்பு வேகின்றிலள்;
எறியும்,Eriyum - வீசுகின்ற
தண் காற்றை தழுவி,Than kaatrai thazhuvi - குளிர்ந்த காற்றைத் தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்,Ennudai Govindhan ennum - ‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்;
வெறிகொள்,Verikol - பரிமளம்மிக்க
துழாய் மலர்,Thuzhai malar - திருத்துழாய் மலர்கள்
நாறும்,Naarum - மணக்கப் பெற்றிருக்கின்றாள்:
செய்கின்றது,Seygindrathu - (இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள்
என் கண்ணுக்கு ஒன்றே,En kannukku ondre - என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல.
3043திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (எல்லாக் கலைகளும் நிரம்பப்பெற்ற சந்திரனைச் சுட்டிக்காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கின்றாள். (உயரநின்ற வொரு மலையைப் பார்த்து, உலகங்களை அளந்தருள்வதற்காக நிமிர வளர்ந்து நிற்கிற ஸர்வேச்வர னென்றுகொண்டு ‘என் ஆர்த்தி தீரவாராய்’ என்றழைக்கின்றாள். நன்றாகப் பெய்யும் மேகத்தைக் கண்டால் ‘நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்’ என்று, மேகத்தைக் கண்டு மயில் கூத்தாடுமாபோலே கூத்தாடு பண்ணி விட்டாரே! என் செய்வேன்! என்கிறாள் திருத்தாய். ஒன்றிய என்றது ஸகல கலைகளும் பொருந்தப்பெற்ற என்றபடி) 4
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4
ஒன்றிய,Ondriya - (எல்லாத்தலைகளும்) பொருந்திய
திங்களை காட்டி,Thingalai kaatti - பூர்ண சந்திரனை (அருகில் நினறார்க்குக்) காட்டி
ஒளி மணிவண்ணனே என்னும்,Oli manivannane ennum - ஒளியையுடைத்தான நீலமணிபோன்ற வடிவையுடையவனே! என்று கூப்பிடுகிறாள்;
நின்ற குன்றத்தினை நோக்கி,Nindra kundrathinai nokki - (அந்தச் சந்திரமண்டலத்தளவு உயர்ந்து) நிற்கிற மலையைப்பார்த்து
நெடுமாலே வா என்று கூவும்,Nedumaale vaa enru koovum - ‘நெடுமாலே! வாராய்’ என்று அழைக்கின்றாள்; (ஸகல உலகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமான் என்று நினைத்து)
நன்று பெய்யும் மழை காணில்,Nandru peyyum mazhai kaanil - நன்றாகப்பொழியும் மேகத்தைக்கண்டால்
நாரணன் வந்தான் என்று,Naaranan vanthaan enru - நாராயணன் வந்தான் என்று கூறி
ஆலும்,Aalum - மேகத்தை கண்ட மயில் போலே கூத்தாடுகின்றாள்;
என்னுடை கோமளத்தை,Ennudai komalaththai - மெல்லியலாளான எனது மகளுக்கு
என்று இன மையல்கள்,Endru ina maiyalgal - இப்படிப்பட்ட மயக்கங்களை
செய்தார்,Seidhaar - பண்ணினார்.
3044திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - கோமள வான் கன்றைப் புல்கி, -இவை ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய்,-அத்தைப் புல்கி இவ்விளமையும் மார்த்தவமும் அழகும் எம்பெருமானோடே கலந்த திரு வனந்த வாழ்வானுக்கு அல்லது கூடாது ஆதலால் ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்து என்னாய் விளையும் என்று அறிகிறிலேன் -என்கிறாள்) 5
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5
கோமளம் வான் கன்றை புல்கி,Komalam vaan kanrai pulgi - இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை)
கோவிந்தன் மேய்த்தன என்னும்,Govindan meyththana ennum - பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்;
போம் இளம் நாகத்தின் பின் போய்,Poam ilam naagaththin pin poay - இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று
அவன் கிடக்கை,Avan kidakkai - அவன் பள்ளிகொள்ளும் படுக்கை
ஈது என்னும்,Eedhu ennum - இது என்று சொல்லுவாள்;
அரு வினையாட்டியேன் பெற்ற,Aru vinaiyaattiyen petra - (அநுபவித்து முடிக்க) அரிய பாபத்தை யுடையேனான நான்பெற்ற
கோமளம் வல்லியை,Komalam valliyai - ம்ருதுஸ்வபாவையாய், கொடிபோன்ற இவளை
மாயோன்,Maayon - எம்பெருமான்
மால் செய்து,Maal seiththu - மயக்கி
செய்கின்ற கூத்து,Seiginra kooththu - பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு
ஆம் அளவு,Aam alavu - எவ்வளவில் ஆகும் என்று
ஒன்றும் அறியேன்,Ondrum ariyen - ஒன்றும் அறிகிலேன்.
3045திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஜீவனத்திற்காகக் குடக்கூத்தாடித் திரிகிறவர்களுண்டே; அவர்கள் வந்து குடங்களை வீசியெறிந்து ஆடுமதுகண்டால் குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல கோவாகிய கோவிந்தனே ஆடுவதாக ப்ரதிபத்திபண்ணி அதனை அருகேயிருந்து காண ஓடுகின்றாள். எப்படிப்பட்டவர்களையு மீடுபடுத்தவல்ல புல்லாஙகுழலின் இசைவந்து செவிப்பட்டால், கண்ணபிரானென்று சொல்லி வியாமோஹிக்கின்றாள். இடைச்சிகள் கொணர்ந்து விற்கும் வெண்ணையைக் கண்டால், அன்று அவன் திருவாய்ப்பாடியில் களவுகண்டு அமுதுசெய்த வெண்ணெயோடொத்த வெண்ணெய் இது என்று சொல்லா நின்றாள்; தாய் உதவாத தனிமையிலே பூதனையென்பவள் தாய்வடிவுகொண்டு வந்து நலியப்புக, அவளை முடித்துத் தன்னைச் சேமமாகத் தந்த உபகாரத்துக்குத் தோற்று இவள் பித்தேறினாளாயிற்று; இப்படியும் ஒரு விலக்ஷணமான பிச்சு உண்டோ வென்கிறாள்; திருத்தாய்.) 6
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6
கூத்தர்,Kooththar - யானும் கூத்தாடுமவர்கள்
குடம் எடுத்து ஆடில்,Kudam eduththu aadil - (குடக்கூத்தாடுதலை ஸ்வபாவமாகவுடைய) க்ருஷ்ணன் ஆம் என்று கருதி (காண்கைக்கு) ஓடுவாள்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில்,Vaaiththa kuzhal osai kaetkil - இனிய குழலின் ஓசையைக் கேட்டாளகில்
மாயவன் என்று,Maayavan enru - க்ருஷ்ணன் என்று நினைத்து
மையாக்கும்,Maiyaakkum - மோஹியா நிற்பாள்;
ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைச்சிகள் கையிலே
வெண்ணெய்கள் காணில்,Vennaiygal kaanil - வெண்ணையைக் கண்டாளாகில்
அவன் உண்ட,Avan unda - அவன் அமுது செய்தருளின் வெண்ணெய் இது என்கிறாள்:
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு,Peychchi mulai suvaiththaarku - பூதனுடைய முலையை ப்ராணனேர்டே சுவைத்து முடித்த கண்ணபிரானுக்கு
கொடி என்பெண்,Kodi enpen - கொடிபோன்றவளான என்னுடைய மகள்
ஏறிய,Eeriya - தலைமண்டையிடும்படி கொண்ட
பித்து,Piththu - பிச்சு இருந்தபடி
ஏ,A - ஆச்சரியம்.
3046திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (“என்பெண்கொடி யேறியபித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக்கட்டிற்று. உலகில் பித்துக்கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே; அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன; பித்து ஏறின நிலைமையிலு;ம பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள்.) 7
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7
ஏறிய பித்தினொடு,Yeriya pitthinodu - மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு,Yella ulagu - ஸகலலோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும்,Kannan padaippu ennum - க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில்,Neeru sevve ida kaanil - பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும்,Netumaal adiyaar endru odum - ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;
நாறு துழாய் மலர்காணில்,Naaru thuzhaai malarkaanil - பரிமளம் வீசும் திருத்துழாயின் பூந்தாரைக் கண்டாளாகில்
நாரணன் கண்ணி ஈது என்னும்,Naaranan kanni eethu enum - ஸர்வஸ்வாமியான நாராயணனுடைய மாலை இது என்கிறாள்;
தேறியும் தேறாதும்,Theriyum theradhum - தேறினவளவிலும் கலங்கினவளவிலும்
இத் திரு,Ith thiru - திருமகள் போல்வளவான இப்பெண்பிள்ளை
மாயோன் திறத்தனள்,Maayon thirathanaal - எம்பெருமான் விஷயமல்லது வேறொன்தறறியாள்.
3047திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.) 8
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8
திரு உடை,Thiru udai - பூர்ணமான செல்வத்தையுடைய
மன்னரை காணில்,Mannarai kaanil - அரசர்களைக் கண்டால்
திருமாலை,Thirumaalai - திருமகள் கொழுநனான எம்பெருமானை
கண்டேனே என்னும்,Kandeney enum - கண்டேனே! என்று கூறுவாள்;
உரு உடை,Uru udai - விலக்ஷண வடிவங்களையுடைய
வண்ணங்கள் காணில்,Vannangal kaanil - (காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால்
உலகளந்தான் என்று துள்ளும்,Ulaga landhaan endru thullum - (இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்?
கரு உடை,Karu udai - விக்ரஹயுக்தமான
தேவு இல்கள் எல்லாம்,Thevu ilgal ellaam - தேவாலயங்கள் யாவும்
கடல்வண்ணன் கோயிலே என்னும்,Kadalvannan koyiley enum - எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள்
வெருவிலும் வீழ்விலும்,Veruvilum veezhvilum - அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும்
ஓவா,Ovaa - ஒழியாதவளாகி
கண்ணன் கழல்கள் விரும்பும்,Kannan kazhalgal virumbum - க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள்.
3048திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பகவர் என்றது பரமை காந்திகள் என்றபடி. ஜ்ஞானானுஷ்டநன பரிபூர்ணர்களான உத்தமாச்ரமிகள் என்று கொள்க. பகவானைச் சொல்லுகிற சொல்லையிட்டே அவர்களைக் கூறினது-அவர்கள் பகவானில் வேறுபடாதவர்கள் என்பதைக் காட்டுதற்கென்க. அப்படிப்பட்டவர்களைக் கண்டால், உலகங்களை யெல்லாம திருவயிற்றிலே வைத்து நோக்கின பெருமானாகவே பிரதிபத்தி பண்ணுவள். ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்கிற பகவத் கீதையிலே நோக்குப்போலும். கரும்பெரு மேகங்கள் காணில் = கறுத்துப் பெருத்து விடாய் தீர்க்குமதான மேகத்தைக் கண்டவாறே அப்படிப்பட்ட வடிவையுடையனான கண்ணபிரான் தானே வந்து தோன்றினனாகக்கொண்டு கோலாஹலங்கள் செய்யா நிற்பள்.) 9
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9
பகவரை,Pagavarai - ஸந்நியாஸிகளை
காணில்,Kaanil - கண்டால்
விரும்பி,Virumbi - ஆதரவு கொண்டு பேணி
வியல் இடம் உண்டானே என்னும்,Viyal idam undaane enum - அகன்ற உலகத்தை ப்ரளயாபத்திலே உண்டு திருவயிற்றிலே வைத்து ரகூஷித்த ஸர்வரக்ஷகனே என்பாள்;
கரு பெரு மேகங்கள் காணில்,Karu peru megangal kaanil - கறுத்துப்பெருத்த மேகங்களைக் கண்டால்
கண்ணன் என்று,Kannan endru - கண்ணபிரான் என்று நினைத்து
ஏற பறக்கும்,Era parakkum - (அங்கே செல்ல) மேலேயெழுந்து பறப்பதற்கு அலமரா நிற்பாள்;
பெரு புலம் ஆநிரை காணில்,Peru pulam aanirai kaanil - பருத்து அழகிய பசுக்களைக் கண்டால்
பிரான்,Piraan - (அவற்றை மேய்த்து ரகூஷிப்பவனான) உபகாரகன்
உளன் என்று,Ulan endru - கூடவருகிறான் என்று நினைத்து
பின் செல்லும்,Pin sellum - அப்பசுக்களின் பின்னே போகிறாள்
பெறல் அரு பெண்ணினை,Peral aru penninai - பெறுதற்கு அரியளான இப் பெண்ணை
மாயோன்,Maayon - எம்பெருமான்
அலற்றி,Alatri - வாய்விட்டு அலறும்படி பண்ணி
அயர்ப்பிக்கின்றாள்,Ayarpikkindraal - (அதற்குமேலே) மோஹிக்கும்படி பண்ணுகிறான்.
3049திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய்.) 10
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10
அயர்க்கும்,Ayarkkum - மோஹியா நிற்பாள்
சுற்றும் பற்றி நோக்கும்,Sutrum patri nokkum - (கண்ணன் தன்னிடத்து வாராதொழியான்று நினைத்து அவன் வருகையை) சுற்றிலும் பலகாலும் பார்ப்பாள்.
அகல நீள் நோக்கு கொள்ளும்,Akala neel nokku kollum - (அவ்வளவிலும் காணாமையினாலே அவன் துர்ரத்திலே நிற்கிறகவெண்ணி) பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே)
வியர்க்கும்,Viyarkkum - வேர்த்து நீராக நிற்கும்
மழை கண் துளும்ப,Mazhai kann thulumba - மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி
வெம்,Vem - வெவ்விதாக
உயிர்க்கொள்ளும்,Uyirkollum - நெடுமூச்செறிகின்றள்
மெய் சோரும்,Mey sorum - (இத்தகைய பரிதாபத்தாலே) சரீரம் தரிக்க மாட்டாமல் வாடுவாள்
பெயர்த்தும்,Peyartthum - பின்னையும் (ஆசைமிகுதியினாலே)
கண்ணா என்று பேசும்,Kanna endru pesum - க்ருஷ்ணனே! என்று கூப்பிடுவாள் (அவ்வளவிலே வந்தானாகவெண்ணி)
வா என்று கூவும்,Vaa endru koovum - பெருமானே என்னுடைய ஸ்வாமியே வரலாகாதோ? என்று அழைப்பாள்
மயல்,Mayal - (இப்படிப்) பிச்சேறும்படி
பெரு காதல்,Peru kaadhal - பெரிய காதலையுடையளான
என் பேதைக்கு,En pethakku - என் சொற்கேளாப் பெண்ணுக்கு
வல்வினையேன்,Valvinaiyen - இவளை இப்படிக் கானும்படி ) கொடிய பாபத்தையுடைய நான்
என் செய்தேன்,En seydhen - என்ன செய்வேன்.?
3050திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11
வல்வினை,Valvinai - ஸகல பாபங்களையும்
தீர்க்கும் கண்ணனை,Theerkkum Kannani - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை
வண் குருகூர் சடகோபன்,Van Kurugoor Sadagopan - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல் வினையால்,Sol vinayal - சொல்லுந் தொழில் வன்மையால்
சொன்ன பாடல்,Sonna paadal - அருளிச் செய்த பாட்டுக்கள்
ஆயிரத்துள் இவை பத்தும்,Aayiraththul ivai patthum - ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும்
நல் வினை என்று கற்பார்கள்,Nal vinai endru karporgal - இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள்
நலன் உடை,Nalan udai - (பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான
வைகுந்தம் நண்ணி,Vaikuntham nanni - பரமபதத்தைக் கிட்டி
தொல்வினை தீர,Tolvinai theera - அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய
எல்லாரும் தொழுது எழ,Ellarum thozhuthu ezha - பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக
வீற்றிருப்பார்,Veetriruppar - இருக்கப்பெறுவர்கள்.