Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: பெரிய திருமொழி (20 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
948பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார், நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித்துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த்தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார்) 1
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1
வாடினேன், Vaadinen - கீழ்க் கழிந்த காலமெல்லாம் வாடிக் கிடந்தேன்;
வாடி, Vaadi - அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன், Manathal varundhinen - மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில், Peru thuyar idumbaiyil - அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன், Pirandhu koodinen - பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப் பெற்றேன்;
கூடி, Koodi - அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி, Ilaiyavar tharum kalaviye karudhi - இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினேன், Avar thammodu odinen - அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி, Odi - இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால், Uyvadhu or porulal - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து, Unarvu enum peru padham thirindhu - ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன், Naadinen - நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி, Naadi - அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.
949பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இப்பாட்டிலும் முன்னடிகளால் பூர்வாவஸ்தையில் அநுதாபத்தையும், பின்னடிகளால் உத்தராவஸ்தையில் ஆநந்தத்தையும் பேசுகிறார்) 2
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2
ஆவியே என, Aaviye ena - ‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும்
அமுதே என, Amudhe ena - ‘எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் (இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு)
நினைந்து உருகி, Ninaindhu urughi - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர், Avar avar - பலபல பெண்டுகளுடைய
பணைமுலை, Panaimulai - பருத்த முலைகளையே
துணை ஆ, Thunai aa - ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன், Paaviyen - பாபியான நான்
உணராது, Unaraadhu - ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன, Eththanai pagalum pazhuthu poy olindhena - ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன;
எத்தனை நாட்கள் பழுது போய் ஒழிந்தன, Eththanai naatkal pazhuthu poy olindhena - அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! (காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!)
தூவிசேர் அன்னம், Thoovisaar annam - இறகுகளையுடைய அன்னப்பறவைகள்
துணையொடும் புணரும், Thunaiyodum punarum - பேடையோடு புணருமிடமாய்
புனல் சூழ், Punal soozh - நீர்நிலங்கள் சூழ்ந்ததான
குடந்தையே, Kudandhaye - திருக்குடந்தையையே
தொழுது, Thozhudhu - ஸேவித்து
உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கும்படியாக
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam ennavinal naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன்
950பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனிதாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார்) 3
சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3
சேமமே வேண்டி, Semame vendi - நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்)
தீ வினை பெருக்கி, Thi vinai perukki - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி, Therivaimaar uruvame maruvi - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள், Kazhintha annaalkal - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன, Oomanar kanda kanavilum pazhudhu aay ozhindhana - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின
காமனார் தாதை, Kaamanar thaadhai - மன்மதனுக்குப் பிதாவும்
நம்முடை அடிகள், Nammudai adigal - நமக்கு ஸ்வாமியும்
தம் அடைந்தார் மனத்து இருப்பார், Tham adainthaar manathu iruppaar - தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய
நாமம், Naamam - திருநாமமாகிய
நாராயணா என்னும் நாமம், Narayana enum naamam - நாராயண நாமத்தை
நான் உய்ய, Naan uyya - நான் உஜ்ஜீவிக்கும்படியாக
நான் கண்டு கொண்டேன், Naan kandu konden - நான் காணப் பெற்றேன்
951பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (‘நாம் எல்லார்க்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட வேண்டியது போய் எல்லாரிலும் நாம் மேற்பட்டிருக்க வேண்டும்; நாமே வெற்றி பெற்று எல்லாரும் நமக்குத் தோற்றிருக்க வேண்டும்’ என்று ஆசைப்பட்டுக் கிடந்தேன்; கையிலிருந்து ஒரு காசு நழுவிப் போனாலும் ஸர்வஸ்வமும் இழந்தாற் போல் அது தவித்துக் கிடந்தேன்; மாதர்களோடு புணர்ந்து வாழ்வதற்கு மேற்பட வாழ்ச்சியேயில்லையென்று துணிந்து கிடந்தேன் ; ஒன்றிலும் நிலைத்து நிற்கமாட்டாமல் கண்டவிடங்களிலும் சபலமாய்த் திரியும் நெஞ்சை யுடையேனான நான் என் செய்வது ! எப்படி உஜ்ஜீவிப்பது !! என்று தடுமாறிக் கிடந்தவளவிலே எம்பெருமானுடை நிர்ஹேதுகக் கிருபையாலே இன்று நன்றாக உஜ்ஜீவிக்க வழி ஏற்பட்டது என்றாராயிற்று.) 4
வென்றியே வேண்டி வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4
வென்றியே வேண்டி, Vendriye vendi - வெற்றியையே விரும்பியும்
வீழ் பொருட்கு இரங்கி, Veezh porutku irangi - நச்வரமான பொருள்களைப் பற்றிக் கரைந்தும்
வேல் கணார் கலவியே கருதி, Vel kanar kalaviye karudhi - வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கலவியை ஆசைப்பட்டும் (ஆக இப்படிகளாலே)
நின்ற ஆ நில்லா நெஞ்சினை உடையேன், Nindra aa nilla nenjinai udaiyen - நின்றபடி நில்லாத [சஞ்சலமான] நெஞ்சை யுடையேனான நான்
என் செய்கேன், En seiken - என்ன பண்ணுவேன்?
அன்று, Andru - முன்னொரு காலத்து
நெடு விசும்புஅணவும் பன்றி ஆய், Nedu visumbu anavum panri aay - நெடிய ஆகாசத்தை அளாவி வளர்ந்த மஹா வராஹஸ்வரூபியாய்
பாரகம் கீண்ட, Paragam keenda - பூ மண்டலத்தை உத்தரித்த
பாழியான், Paazhiyaan - மிடுக்கையு டையனாய்
ஆழியான், Aazhiyaan - ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய
அருளே, Arule - க்ருபையினாலே
நான் நன்று உய்ய, Naan nanru uyya - நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன்
952பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (உலகில் திருடப்படும் பொருளின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பொருளுடையவனது யோக்யதையின் தாரதம்மியத்திற்கு ஏற்பவும் பாபத்திலும் தாரதம்மியமுண்டு; விறகு திருடினவனுடைய பாபத்திற்காட்டில் ரத்னம் திருடினவனுடைய பாபம் பெரிது; சூத்ரனுடைய பொருளைத் திருடின பாபத்திற்காட்டில் பிராமணனுடைய பொருளைத் திருடின பாபம் பெரிது. நான் திருடின பொருளும் சிறந்தது, அப்பொருளுடையவனும் ஸர்வோத்தமன் ; சிறந்தரத்னத்தினும் மேற்பட்டதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்; அந்த வஸ்துவோ ஸர்வோத்தமனான எம்பெருமானுடையது. ஆகையாலே – ‘இதற்கு மேற்பட்ட பாபமில்லை’ என்னலாம்படியான கொடிய பாபத்திற்குக் கொள்கலமான களவைச் செய்தவனாயினேன். இப்போது நானிருக்கிறபடியைப் பாருங்கள்; ஸ்ரீமந்நாராயண நாமத்தை அநுஸந்திக்க வேணுமென்று நினைக்கும்போதே எனது ஹருதயம் நீர்ப்பண்டமாக உருகுகின்றது; அத்திருநாமத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினால் குரல் தழதழத்துப் போகிறது; ஆநந்தக் கண்ணீர் உடம்பெங்கும் முத்துமாலையிட்டாற்போலே பெருகுகின்றது. இப்படியாயிருந்து கொண்டு அஹோராத்ரமும் நான் நாராயண நாமந்தன்னையே கதறுபவனாயினேன் என்றாராயிற்று.) 5
கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் –1-1-5
கள்வனேன் ஆனேன், Kalvanen aanen - (கீழ்க்கழிந்த காலமெல்லாம்) ஆத்மாபஹாரக் கள்வனாகி
படிறு செய்து இருப்பேன், Padiru seydhu iruppen - பலபல தீமைகளைச் செய்பவனாகி
கண்டவா திரிதந்தேனேலும், Kandava thirithandhenelum - (இப்படி) மனம்போன படியே திரிந்துழன்றேனாயினும் (இன்று)
தெள்ளியேன் ஆனேன், Thelliyen aanen - தெளிவு பெற்றவனானேன்
திருஅருள்சிக்கன பெற்றேன், Thiru arul sikkana petren - பகவத் கிருபையைத் திண்ணிதாக லபிக்கப் பெற்றேன்
செல் கதிக்கு அமைந்தேன், Sel gathikku amaindhen - போகவேண்டிய நல்வழிக்கு ஆளானேன்
உள்எலாம் உருகி, Ul elam urugi - ஹ்ருதய மடங்கலும் நீர்ப்பண்டமாகிக்
குரல் தழுத்தொழிந்தேன், Kural thazhuthozindhen - குரல் தழுதழுக்கப்பெற்று
கண்ண நீர் உடம்பு எலாம் சோர, Kanna neer udambu elam sora - ஆநந்த பாஷ்பமானது சரீரம் நிறையப்பெருகப்பெற்று
நள் இருள் அளவும் பகல் அளவும், Nal irul alavum pagal alavum - அஹோராத்ர விபாகமின்றி ஸர்வகாலத்திலும்
நாராயணா என்னும் நாமம் நான் அழைப்பன், Narayana enum naamam naan azhaippan - நாராயணா நாமத்தைச்சொல்லி நான் கதறா நிற்பன்
953பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.) 6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6
நம்பிகாள், Nambikaal - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!
எம்பிரான், Embiraan - எமக்கு உபகாரகனும்
எந்தை, Enthai - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம், Ennudaiya sutram - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு, Enakku arasu - என்னை ஆண்டவனும்
என்னுடைய வாழ்நாள், Ennudaiya vaazhnaal - என்னுடைய ப்ராண பூதனும்
அரக்கர் வெருக்கொள அம்பினால், Arakkar verukkola ambinaal - ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், Nerukki avar uyir sekutha em annal - தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய
வம்பு உலாம் சோலை, Vambu ulaam solai - பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்
மாமதிள், Maamadhil - பெரிய மதிள்களையும் உடைத்தான
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி, Thanjai maa manikkoyile vanangi - தஞ்சை மாமணிக் கோயிலையே ஸேவித்து
நான் உய்ய, Naan uyya - (உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன், Narayana enum naamam kandu konden - நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்
954பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் - என்கிறார்.) 7
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7
இல் பிறப்பு அறியீர், Il pirappu ariyeer - இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும்
இவர் அவர் என்னீர், Ivar avar enneer - இப்போது ஸம்பந்நராயிருக்கும் இவர்கள் முன்பு தரித்ரராயிருந்தவர்கள் என்று அறியாதவர்களாயும்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர், Innadhu or thanmai endru unareer - ‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்று அறியாதவர்களாயும்
உலகில் தொண்டரை, Ulagil thondarai - உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும் நீசர்களை
கற்பகம் என்று, Karpagam endru - கல்ப வ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும்
புலவர் என்று, Pulavar endru - ஸர்வஜ்ஞரென்றும்
களைகண் என்று, Kalaikan endru - ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி)
கண்டவா பாடும், Kandavaa paadum - மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்) கவிபாடுகின்ற
சொல்பொருள் ஆனீர், Solporul aaneer - சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே!
சொல்லுகேன், Solluken - உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்
வம்மின், Vammin - நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்
புனல் சூழ் குடந்தையே தொழுமின், Punal soozh Kudanthaiye thozhumin - நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்
நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின், Narayana enum naamam paadi neer uymin - நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்
நல் பொருள் காண்மின், Nal porul kaanmin - உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள்
955பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குனிந்து கேட்டவனல்லேனாகையாலே ஒரு சாஸ்த்ர ஞானமும் எனக்கில்லை ; நெஞ்சை ஒரு நொடிப்பொழுதாகிலும் நல்விஷயத்திலே செலுத்தின னல்லேன் ; செவி வாய் கண் மூக்கு உடலென்னுமைம்புலன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலேயே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவு கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை ஸம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் ஹிம்ஸிக்கும் வழியைச் சிந்தித்தும் திரிந்தேன்; எல்லாரையும் ஹிம்ஸித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்றுவரையில் ; இன்று இந்த நிலைமைகளெல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியைச் சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.) 8
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தாருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8
கலைகள், Kalaigal - சாஸ்த்ரங்களை
கற்றிலேன், Kattrilen - கற்றறிந்தவன் அல்லேன்
ஐம்புலன் கருதும் கருத்துள், Aimpulan karuthum karuthul - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே
மனதைத் திருத்தினேன், Manathai thiruthinen - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்
அதனால், Adhanaal - இப்படி இருந்ததனாலே
பேதையேன், Pethaiyen - அவிவேகியான நான்
நன்மை பெற்றிலேன், Nanmai petrilen - ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்
பெரு நிலத்து ஆர், Peru nilathu aar - பெரிய இப்பூமியிலேயுள்ள
உயிர்க்கு எல்லாம், Uyirku ellaam - பிராணிகளுக்கு எல்லாம்
செற்றமே வேண்டி, Settrame vendi - தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக் கொண்டு
திரிதருவேன், Thiritharuven - (அதுவே போதுபோக்காகத்) திரிந்து கொண்டிருந்தேன்
தவிர்ந்தேன், Thavirnthen - (இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும்), இன்று பகவத் கடாக்ஷத்தாலே இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்
அடியேன், Adiyen - தாஸனாகப் பெற்ற நான்
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி, Selkathikku uyyum aaru enni - செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயணா நாமத்தை
நல் துணை ஆக பற்றினேன், Nal thunai aaga patrinen - நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன்
956பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.) 9
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும், Kulam tharum - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்
செல்வம் தந்திடும், Selvam thandhidum - ஐச்வரியத்தை அளிக்கும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம், Adiyaar padu thuyar aayina ellaam - அடியவர்கள் அனுபவிக்கிற துக்கம் என்று பேர்பெற்றவை எல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும், Nilam tharam seiyum - தரை மட்டமாக்கிவிடும்
நீள் விசும்பு அருளும், Neel visumbu arulum - பரமபதத்தைக் கொடுக்கும்
அருளொடு, Arulodu - எம்பெருமானுடைய கிருபையையும்
பெரு நிலம், Peru nilam - கைங்கரியமாகிற மஹா பதவியையும்
அளிக்கும், Alikkum - உண்டாக்கும்
வலம் தரும், Valam tharum - (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்
மற்றும், Matrum - இன்னமும் வேண்டிய நன்மைகளை எல்லாம்
தந்திடும், Thandhidum - செய்து கொடுக்கும்
பெற்ற தாயினும், Petra thaayinum - பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும்
ஆயின செய்யும், Aayina seiyum - ஹிதங்களைச் செய்து கொடுக்கும் (ஆக இப்படி)
நலம் தரும் சொல்லை நான், Nalam tharum sollai naan - வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை
கண்டு கொண்டேன், Kandu konden - அடியேன் லபிக்கப் பெற்றேன்
957பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) (இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் - என்று தலைக்கட்டுகிறார்.) 10
மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10
மஞ்சு உலாம் சோலை வண்டு, Manju ulaam solai vandu - மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும்
வண்டுஅறை மா நீர், Vandu arai maa neer - வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை உடையதுமான
மங்கையார், Mangaiyaar - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும்
வாள், Vaal - வாளை உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
செம் சொலால் எடுத்த, Sem solaal edutha - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த
தெய்வம், Dheivam - திவ்யமான
நல்மாலை இவை, Nal malai ivai - இந்த நல்ல சொல் மாலையை
சிக்கென கொண்டு, Sikkena kondu - நாவிலே த்ருடமாகக்கொண்டு
தொண்டீர், Thondir - பாகவதர்காள்!
துஞ்சும் போது அழைமின், Thunjum pothu azhaimin - சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள்
துயர்வரில் நினைமின், Thuyarvaril ninaimin - மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள்
துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம், Thuyar ileer sollilum nanru aam - துக்கமொன்று இல்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும்
நாராயணா என்னும் நாமம், Narayana ennum namam - நாராயண நாமமானது
நம்முடை வினைக்கு, Nammudai vinaikku - நமது பாபங்களை முடிப்பதற்கு
நஞ்சு தான் கண்டிர், Nanju thaan kandir - விஷமேயாமென்பது தின்ணம்
958பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1
நெஞ்சே, Nenje - மனமே!
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று
வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய்
மா, Maa - மிக்க
வலம், Valam - பலம் பொருந்திய
ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய
உடல், Udal - சரீரம்
கெட, Keda - சிதறும்படி
வரி, Vari - அழகிய
சிலை, Silai - சார்ங்கம் (வில்)
வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று)
ஏலம், Elam - பரிமளம், வாசனை
நாறு, Naaru - வீசுகின்ற
தண், Than - குளிர்ந்து
தடம், Thadam - பரந்த
பொழில், Pozhil - தோட்டங்களிலே
இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே
ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள்
அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு
பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை
அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே
அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக
முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி
நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய்
தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய
பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை
சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு
959பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2
நெஞ்சே, Nenje - மனமே!
மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது
கலக்க, Kalakka - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு
அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி
மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை
பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய
அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில்
விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய்
இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான
வேழங்கள், Vezhangal - யானைகள்
துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக
பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற
வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய
அரி அவை, Ari avai - சிங்கங்களானவை
திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய
பிரிதி, Pirithi - திருப்பிரிதியை
சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு
960பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் சொன்னார் கீழ்ப்பாட்டில். நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார் இதில்) 3
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நல்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3
நெஞ்சே, Nenje - மனமே!
துடி கொள் நுண் இடை, Thudi kol nun idai - உடுக்கைபோன்ற ஸூக்ஷ்மமான இடையையும்
சுரிகுழல், Surikuzhal - சுருண்ட கூந்தலையும்
துளங்கு எயிறு, Thulangu eyiru - பளபளவென்று விளங்குகின்ற பற்களையும் உடையவளாய்
இள கொடி திறத்து, Ila kodi thirathu - இளங்கொடி போன்றவளான நப்பிள்ளைப் பிராட்டிக்காக
ஆயர், Aayar - இடையர்களுடையவையாய்
இடி கொள் வெம் குரல் இனம் விடை, Idi kol vem kural inam vidai - இடிபோல் வெவ்விய குரலை யுடைவையாய் கூட்டமாக வந்தவையான ஏழு ரிஷபங்களை
அடர்த்தவன், Adarthavan - வலியடக்கின பெருமான்
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப் பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையினுள்
வண்டு இசை சொல, Vandu isai sola - வண்டுகள் இசைபாடா நிற்க
மணி அறை மிசை, Mani arai misai - இந்திரநீல மணிமயமான பாறைகளின் மேலே
கடிகொள் வேள்கையின் நறுமலர் அமளியில், Kadikol velkaiyin narumalar amaliyil - வேங்கைமரத்தினது மணம் மிக்க புஷ்பமயமான படுக்கையிலே
வேழம், Vezham - யானையானது
பிடியினோடு, Pidiyinodu - தன் பேடையோடுகூட
துயில்கொளும், Thuyilkolum - உறங்குமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
961பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.) 4
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொ இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4
நெஞ்சே!, Nenje! - மனமே!
மறம் கொள் வெருவர, Maram kol veruvara - சீற்றங்கொண்ட
ஆள் அரி உரு என, Aal ari uru ena - நரசிங்க மூர்த்தி என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே
வெருவர, Veruvara - உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞசெய்து)
ஒருவனது, Oruvanathu - வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய
அகல் மார்வம், Agal maarvam - விசாலமான மார்பைப்
திறந்து, Thirandhu - பிளந்து
வானவர் (அந்த விடாய்தீர), Vaanavar (antha vidaaytheera) - (இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள்
மணி முடி பணிதர, Mani mudi panithara - மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக
இருந்த, Irundha - என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷணமான இமயமலையின் கண்,
ஏனங்கள், Yenangal - பன்றிகளானவை
இறங்கி, Irangi - தலை குனிந்து
வளை மருப்பு, Valai maruppu - வளைந்த கொம்புகளாலே
இடந்திட, Idanthida - (மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து)
அருகு கிடந்து எரி வீசும் பிறங்கு மா மணி, Arugu kidandhu eri veesum pirangu ma mani - ஸமீபத்திலிருந்து கொண்டு, தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை
அருவியொடு, Aruviyodu - மலையருவிகளோடுகூட
இழிதரு, Izhitharu - இழியுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
962பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5
நெஞ்சே, Nenje - மனமே!
கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை
அமரர்கள், Amarargal - தேவர்கள்
தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக
கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான்
அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண்
வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை
இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய
வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி)
அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து
பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை
தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு
அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
963பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிசர்க்கும் அநுகூலமாக இமயமலையிலேவந்து எழுந்தருளியிருக் கிறானென்பது தோன்ற அருளிச்செய்கிறார்) 6
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6
நெஞ்சே, Nenje - மனமே!
வானவர், Vaanavar - தேவர்கள்
இணங்கி, Inangi - திரளாகக் கூடி
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணை பள்ளி கொள் பரமா என்று, Panangal aayiram udaiya nal aravu anai palli kol parama endru - ‘ஆயிரம் படங்களையுடைய திருவனந் தாழ்வானாகிற சயனத்திலே பள்ளி கொண்டருளும் பரமபுருஷனே!’ என்று சொல்லி,
மணி முடி பணி தர இருந்த நல்இமயத்து, Mani mudi pani thara irundha nal imayathu - மணி முடிகளாலே வணங்கும் படி எம்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற நல்ல இமயமலையின் கண்,
மணம் கொள் நெடு மாதவி கொடி அவை, Manam kol nedu Madhavi kodi avai - பரிமளமுள்ளவையும் நீண்டவை யுமான குருக்கத்திக் கொடிகளானவை
விசம்பு உற நிமிர்ந்து, visumbu ura nimirndhu - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து
முகில் பற்றி பிணங்கு, Mugil patri pinangu - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே
பூ, Poo - புஷ்பிக்கப்பெற்ற
பொழில், Pozhil - (குருக்கத்திச்)சோலைகளிலே
வண்டு நுழைந்து, Vandu nuzhaindhu - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து
இசை சொலும், Isai sollum - இசைபாடுமிடமான
பிரிதி, Piridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
964பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே) 7
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7
நெஞ்சே, Nenje - மனமே!
கனம் வரை, Kanam varai - அழகிய தாழ்வரைகளில்
கார்கொள் வேங்கைகள், Kaarkol vengaikal - மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை
தழுவிய, Thazhuviya - தழுவிக்கொண்டிரா நின்ற
கறிகொடி, Karikodi - மிளகுகளின் கொடிகளானவை
துன்னி வளர், Thunni valar - நெருங்கிப் படரப்பெற்றதும்
புனம் வரை, Punam varai - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே
போர்கொள் வேங்கைகள் தழுவிய, Porkol vengaikal thazhuviya - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய்
பூ பொழில், Poo pozhil - அழகிய சோலைகளை யுடையதான
இமயத்துள், Imayathul - இமயமலையின் கண்
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து, Er kol poo sunai tadam padinthu - அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி
இனம் மலர் எட்டும் இட்டு, Inam malar ettum ittu - சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து
பேர்கள் ஆயிரம், Perkal aayiram - ஸஹஸ்ர நாமங்களையும்
பரவி நின்று, Paravi ninru - வாய்வந்தபடி சொல்லி
அடி தொழும், Adi thozhum - எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
965பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!) 8
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8
நெஞ்சே, Nenje - மனமே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை, Iravu koornthu irul perugiya varai muzhai - இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே
இரு பசியது கூர, Iru pasiyathu koora - பெரும்பசி உண்டாக
அரவம், Aravam - மலைப்பாம்புகளானவை
ஆவிக்கும், Aavikum - பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற
அகம் பொழில் தழுவிய, Agam pozhil thazhuviya - உட்சோலைகளோடு கூடிய
அரு வரை இமயத்து, Aru varai Imayathu - ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,
இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள்
பிரமனோடு சென்று, Brahmanodu sendru - நான்முகனோடு கூடச் சென்று
பரமன் என்று எண்ணி நின்று, Paraman endru enni ninru - பரமபுருஷனே! என்றும்
ஆதி என்று, Aadhi endru - ஆதி மூலமே ! என்றும்
எம் பனிமுகில் வண்ணன் என்று, Em panimukil vannan endru - குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும்
எண்ணி நின்று, Enni ninru - அநுஸந்தித்துக் கொண்டு
அடி தொழும், Adi thozhum - திருவடிகளை வணங்குதற்குரிய
பெரு தகை, Peru thagai - பெருந்தன்மை பொருந்திய
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
966பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண் தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!) 9
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9
நெஞ்சே, Nenje - மனமே!
ஆயிரம் நாமங்கள், Aayiram Naamangal - ஸஹஸ்ர நாமங்களை
ஓதி, Odhi - எப்போதும் சொல்லிக் கொண்டு
உணர்ந்தவர்க்கு, Unarnthavarkku - (அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு
உறுதுயர் அடையாமல், Uruthuyar Adaiyaamal - உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும்
ஏதம் இன்றி, Aedham Inri - பாவமொன்றும் இல்லாதபடியாகவும்
நின்று அருளும், Nindru Arulum - எப்போதும் க்ருபை செய்கின்ற
நம் பெருந்தகை, Nam Perunthagai - நம் ஸ்வாமியானவன்
இருந்த, Irundha - எழுந்தருளி யிருக்குமிடமான
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையின் கண்
தாது மல்கிய, Thaathu Malkiya - தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான
பிண்டி, Pindi - அசோக மலர்கள்
விண்டு அலர்கின்ற, Vindu Alargindra - விரிந்து அலருகிற
தழல்புரை எழில், Thazhalpurai Ezhil - நெருப்புப் போன்ற அழகை
பேதை வண்டுகள் நோக்கி, Pedhai Vandugal Nokki - அறிவில்லாத வண்டுகள் பார்த்து
எரி என, Eri Ena - நெருப்பென்று நினைத்து
வெருவரு, Veruvaru - பயப்படுமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
967பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10
கரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை
கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு
முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு)
பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை
களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து
வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான
கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய
ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது
அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல
நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு
அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா